பதிவு செய்த நாள்
13
அக்
2020
02:10
கிருஷ்ணகிரி: புனித பாத்திமா அன்னை ஆலய, 47ம் ஆண்டு திருத்தல பெருவிழா நடந்தது. கிருஷ்ணகிரி, புனித பாத்திமா அன்னை ஆலய, 47ம் ஆண்டு திருத்தல பெரு விழா கடந்த, 9ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று மாலை, தர்மபுரி மறை மாவட்ட முதன்மை குரு அருள்ராஜ் மறையுரையுடன் திருக்கொடியேற்றம் நடந்தது. கடந்த, 11ல் மாலை, மாதாவின் தேர் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு ஆலயத்தின் முன் நிறுத்தி வைக்கப்பட்டது. ஏராளமான கிறிஸ்தவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர். ஒவ்வொரு ஆண்டும், இந்த தேர், கிருஷ்ணகிரி நகர் முழுவதும் மாலை, 7:00 மணி முதல் இரவில் நகர் வலம் வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு, கொரோனா தொற்று காரணமாக நகர்வலம் செல்லாமல், திருத்தேர் காலை முதல் இரவு வரை ஆலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. விழாவையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை, 6:30 மணிக்கு மறைவட்ட முதன்மை குரு கந்திகுப்பம் பங்கு தந்தை மதலைமுத்து தலைமையில், திருப்பலி அன்னையின், திருக்கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைந்தது.