துக்கம் நீக்கும் துர்கை வழிபாடு: நாளை நவராத்திரி முதல் நாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2020 12:10
அம்பிகையே துர்கையே ஆதி பராசக்தியே!: துர்கா என்ற சொல்லுக்கு அணுக முடியாதவள் என்பது பொதுவான பொருள். அதாவது தீய சக்திகளாலும் உண்மை பக்தி இல்லாதவர்களாலும் அணுக முடியாதவள் என்று அர்த்தம்.அம்பிகையிடத்தில் உண்மை பக்தியும் நம்பிக்கையும் வைத்திருப்பவர்கள் எப்போது எந்தச் சூழலில் அழைத்தாலும் ஓடோடி வந்து காப்பாற்றுவாள். இதனால் யாரும் அணுக முடியாதவள் என்று முன்பு சிந்திக்கப்பட்ட துர்கா இங்கு சதார்த்ர சித்தா என்று போற்றப்படுகிறாள். நுாறு அஸ்வமேத யாகம் செய்தால் இந்திரனாகலாம்; இதனால் அப்போது இருக்கும் இந்திரன் பதவியிழந்து விடுவான். நகுஷன் என்ற அரசன் நுாறு அஸ்வமேத யாகம் செய்து இந்திர பதவி அடைந்து விடுகிறான்; அதனால்அவனுக்கு ஆணவம் ஏற்படுகிறது. முன்பிருந்த இந்திரனை அவமானப்படுத்தி துன்புறுத்தவே அவனுக்கு பயந்து இந்திரன் ஓடி ஒளியும் சூழல் உருவாகிறது. இதனால் மேலும் ஆணவம் அதிகம் கொண்ட நகுஷன் மூவுலகையும் ஆட்டி படைத்துத் துன்புறுத்துகிறான். மேலும் இந்திரனின் மனைவி சசிதேவியின் அழகில் மயங்கி அவளையடைய பேராசை கொள்கிறான்.இதையறிந்த சசிதேவி ஸ்ரீ துர்கா விரதம் மேற்கொண்டு அம்பிகையிடம் தன்னைக் காப்பாற்ற இறைஞ்சுகிறாள். ஸ்ரீ துர்கா தேவியும் தம் மாய சக்தியால் நகுஷனின் மனதில் விபரீத எண்ணம் ஒன்றை தோற்றுவிக்கிறாள்.
அதன்படி எல்லாராலும் மதிக்கப்படும் சப்த ரிஷிகளைப் பல்லக்கு துாக்குமாறு செய்து அதில் ஏறி சசியை காணப் புறப்படுகிறான். குள்ளமான அகஸ்தியரால் சரியாகத் துாக்க முடியாமல் தடுமாறுவதைக் கண்ட நகுஷன் அகஸ்தியரைப் பார்த்து சர்ப்ப... சர்ப்ப... என்று கூறி காலால் உதைத்துப் பெரும் பாவம் செய்கிறான்.சர்ப்ப என்றால் வேகமாகச் செல்ல வேண்டியதையும் குறிக்கும்; பாம்பையும் குறிக்கும். அவனது அடாத செயலால் வெகுண்ட அகஸ்திய முனிவர் நகுஷனைப் பார்த்து சர்ப்ப... சர்ப்ப... என்று திருப்பிச் சொன்னார் அதுவே அவனுக்கு சாபமாகியது.நகுஷன் பாம்பாக மாறி கீழே விழ ஸ்ரீ துர்கையின் கருணையை எண்ணி மகிழ்ச்சியுடன் வணங்குகிறாள் சசிதேவி. மூவுலகும் அன்னையை போற்றியது. மீண்டும் பதவி பெற்று உலகுக்கு நன்மை செய்கிறான் இந்திரன். நவராத்திரிக்கு நிவேதன உணவு செய்யச் சொல்லிக் கொடுக்க ஜி.ஆர்.டி. ஓட்டல் தலைமை சமையல் கலைஞர் சீதாராம் பிரசாத் முன்வந்தார். ஒவ்வொரு பெயராகச் சொல்லச் சொல்ல நிமிட நேரங்களில் எல்லாவற்றையும் தயார் செய்து அசத்தினார். இனி தினமும் சீதாராம் பிரசாத் சொல்லிக் கொடுப்பார்.
நவராத்திரி முதல் நாளுக்கான நிவேதனம்
பால் பாயசம் தேவையான பொருட்கள்
பச்சரிசி - 50 கிராம் பால் - 1 லிட்டர் ஏலக்காய் பொடி - 5 கிராம் சர்க்கரை - 100 கிராம் நெய் - 50 மில்லி முந்திரிப்பருப்பு - 25 கிராம் காய்ந்த திராட்சை - 25 கிராம்
செய்முறை: அரிசியை களைந்து அரை மணி ஊற வைத்து பாலுடன் சேர்த்து மிருதுவாக வேக வைக்கவும். ஏலக்காய் பொடி சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை கிளறி விடவும். நெய்யில் முந்திரி காய்ந்த திராட்சை வறுத்து போடவும். பால் பாயசம் தயார்!இதில் அடங்கியுள்ள சத்துக்கள்மொத்த கலோரி 408; கார்போஹைட்ரேட் 174; புரதம் 44; கொழுப்பு 139 .இரண்டு ரெசிப்பிகளும் தலா ஐந்து பேர் சாப்பிடலாம்
முதல் தினமான நாளை ஸ்ரீ துர்காதேவி அருள்பெற சொல்ல வேண்டிய ஸ்லோகம்
ஹே துர்கா தேவி...! உன்னை நினைத்தாலே போதும்; எல்லா ஜீவராசிகளின் பயத்தையும் போக்குகிறாய்! உன்னை எண்ணி வழிபடுபவர்களுக்கு வேண்டிய வரங்களை அருளுகிறாய். தரித்திரம் துன்பம் மற்றும் பயம் போன்றவற்றை போக்கி அருளுவதில் உனக்கு இணையான தெய்வங்கள் கிடையாது. ஏனெனில் உயிர்களின் துன்பத்தை போக்கும் கசிந்துருகும் தாயல்லவா நீ!
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்
தேவையான பொருட்கள்
வெள்ளை கொண்டைக்கடலை - 500 கிராம் எண்ணெய் - 20 மில்லி கடுகு - 2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி கருவேப்பிலை - 2 ஈர்க்கு காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 2 துருவிய இஞ்சி - 10 கிராம் பெருங்காயம் - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப துருவிய தேங்காய் - 150 கிராம்
செய்முறை: கொண்டை கடலையை எட்டு மணி நேரம் ஊற வைத்து வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி காய்ந்த மிளகாய் கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை துருவிய இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து பெருங்காயம் தாளிக்கவும். இதில் கொண்டைக்கடலை உப்பு சேர்க்கவும். அடுப்பை அணைத்து விட்டு துருவிய தேங்காய் சேர்த்து கிளறவும். இதில் அடங்கியுள்ள சத்துகள்: மொத்த கலோரி 2332.6; கார்போஹைட்ரேட் 257.5; புரதம் 41; கொழுப்பு 129.5
பூஜை நேரம் : மாலை 5:00 - இரவு 7:00
பூஜைமுறை : தாம்பாளத்தில் எட்டு இதழ் தாமரை மாக் கோலமிட்டு பூக்களால் அலங்கரித்து அதன் நடுவே குத்துவிளக்கேற்றி வைத்து கீழுள்ள சுலோகத்தை சொல்லி தீபத்திற்கு பூ சாத்தி ஓம் ஸ்ரீ துர்காதேவ்யை நம... என்று பூஜிக்கவும்.
நிவேதனம் : பால் பாயசம், கொத்துக்கடலை சுண்டல் இயன்ற பழங்கள் வெற்றிலை, பாக்கு முதலியன.
பாடல்கள் :அபிராமி அந்தாதி பாடல்களையும் இன்னும் தெரிந்த அம்மன் பாடல்களையும் பாடி தீபாராதனைக் காட்டி பூஜையை முடிக்கவும்; பின் எல்லாருக்கும் குங்குமம் மற்றும் நிவேதனப் பிரசாதங்கள் வழங்கவும்.
பெண்களுக்கு ;சுமங்கலிகளுக்கு சிவப்பு ரவிக்கைத் துணியுடன் மங்களப் பொருட்கள் வைத்துக் கொடுத்து அவர்களை துர்கையாக எண்ணி வழிபடவும். நிறைவாக தீபத்துக்கு ஆரத்தி விட்டு பூஜையறையில் சேர்த்து விடவும்.தினமும் மறுநாளைக்கான கோலம், பூஜைமுறை, நிவேதனம் வெளிவரும்.