பதிவு செய்த நாள்
21
அக்
2020
11:10
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே இடிகரையில் உள்ள அருள்மிகு பள்ளிகொண்ட ரங்கநாதர் திருக்கோயிலில், புதிய தேர்கள் தயாரிப்பு பணி துவங்கியது.
இங்குள்ள பள்ளிகொண்ட ரங்கநாதர் திருக்கோயிலில் ஆண்டுதோறும், சித்ரா பவுர்ணமி நாளில் தேரோட்டம் நடக்கும். அப்போது, அருள்மிகு ரங்கநாதர், ஆண்டாள் தாயார் தனித்தனி தேர்களில், நான்கு மாட வீதிகளில் வலம் வருவர். பல ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட இந்த தேர்கள் பழமையாகி விட்டதால், புதிய தேர் களை உருவாக்க, இந்து சமய அறநிலைத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.
புதிய தேர் கட்டுமான பணிக்கான துவக்க நிகழ்ச்சி நடந்தது. பணியை உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் அருண்குமார், ஆறுகுட்டி, சின்னராஜ், அர்ஜுனன், இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதர் திருக்கோயில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேர் கட்டுமானம் குறித்து, ஸ்தபதி சுந்தரவடிவேல் கூறுகையில்," பெருமாள் தேர், பதினொன்றே முக்கால் அடி உயரமும், ஆண்டாள் தேர் ஒன்பதே முக்கால் அடி உயரம் கொண்டதாக இருக்கும். தேர்கள் செய்ய வாகை மற்றும் இலுப்பை மரம் பயன்படுத்தப்படும். தினமும் குறைந்தபட்சம், 15 பணியாளர்கள் இதில் ஈடுபடுவர். ஒரு ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.