பதிவு செய்த நாள்
22
அக்
2020
05:10
உடுமலை, சுற்றுப்பகுதி கோவில்களில் ஐந்தாம் நாளாக நவராத்திரி கொலுவில் லட்சுமி தேவியை முதன்மையாக அழைத்து வழிபாடு நடந்தது.
நவராத்திரி கொலுவில் முதல் மூன்று நாட்கள் துர்கை தேவியையும், அடுத்த மூன்று நாட்களில் லட்சுமி தேவியை அழைத்தும் வீடுகளிலும், கோவில்களிலும் வழிபடுகின்றனர். உடுமலை, ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில், கொலு அமைத்து நாள்தோறும் காலை, மாலையில் சிறப்பு பூஜை நடக்கிறது. பக்தர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வழிபட்டு செல்கின்றனர்.மடத்துக்குளம் -மடத்துக்குளம்பகுதியில், நவராத்திரியையொட்டி, பல வீடுகளில் விதவிதமான கொலு பொம்மைகளை வைத்து வண்ண விளக்குகளால் அலங்கரித்துள்ளனர். மடத்துக்குளம், நஞ்சையபிள்ளைபுதுார் பகுதியில் கொலு வைத்து நவராத்திரி வழிபாடு செய்கின்றனர்.
ஆனைமலைகோட்டூர் மலையாண்டிபட்டிணம் கோதண்டராமர் கோவிலில், நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. பெண்கள் பக்தர்கள் சார்பில், கோவில் வளாகத்தில், மாகாளியம்மன், காளியம்மன், மாரியம்மன், சிவன், விஷ்ணு, கிருஷ்ணன், சீதை, ரங்கநாதர் உள்பட மொத்தம், 310க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகள், பொம்மைகளை கொலுவில் வைத்து வழிபடுகின்றனர். கொலுவில், தினமும் பக்தர்கள் முளைப்பாரி வைத்து, பக்தி பாடல்கள் பாடி, விமரிசையாக விழாவை கொண்டாடி வருகின்றனர். கோதண்டராமர் மற்றும் சீதைக்கு, தினமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்படுகிறது.