பதிவு செய்த நாள்
28
அக்
2020
11:10
திருவொற்றியூர் : வடிவுடையம்மன் கோவில் நவராத்திரி திருவிழா, கொடியிறக்கத்துடன் நிறைவுற்றது. சென்னை, திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, ஆண்டுதோறும், நவராத்திரி திருவிழா, வெகு விமரிசையாக நடக்கும்.இவ்வாண்டு, கொரோனா பரவல் காரணமாக, அக்., 17ம் தேதி, பக்தர்களின்றி எளிமையான முறையில், கொடியேற்றத்துடன் நவராத்திரி விழா துவங்கியது.தொடர்ந்து, உற்சவ தாயார், தபசு, பராசக்தி, நந்தினி, கவுரி, பத்மாவதி, உமா மகேஸ்வரி, ராஜ ராஜேஸ்வரி, மகிஷாசுர மர்த்தினி, சரஸ்வதி அலங்காரங்களில் எழுந்தருளி, கோவில் உள் பிரகாரத்தில் வலம் வந்தார்.
கடைசி நாளான நேற்று முன்தினம் இரவு, உற்சவ தாயார் மீனாட்சி அலங்காரத்தில் எழுந்தருளி, பின் கொடிமரம் அருகே நிலையை அடைந்தார். கொடியிறக்க நிகழ்வுடன், நவராத்திரி திருவிழா நிறைவுற்றது. அதேபோல், அகிலாண்டேஸ்வரி - அகத்தீஸ்வரர் கோவிலிலும், நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டது. 10 நாட்களில், பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளிய உற்சவ தாயார், நிறைவு நாளில், புஷ்ப அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே, பொன்னியம்மன் கோவிலில், கடைசி நாளில் பாரிவேட்டை அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார்.