பதிவு செய்த நாள்
28
அக்
2020
02:10
சென்னை: கள்ளக்குறிச்சி வீரசோழபுரம் சிவன் கோயிலுக்கு சொந்தமான இடத்தை அறநிலைய துறையிடம் இருந்து வாங்காமலேயே புதிய கலெக்டர் அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டு உள்ளது. முதல்வரின் ஆசியுடன் கடவுள் சொத்து அம்போ ஆகிறது. அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிலத்தை கபளீகரம் செய்து கலெக்டர் அலுவலகம் கட்ட வேண்டுமா; அரசுக்கு வேறு இடமே இல்லையா? என பக்தர்கள் குமுறுகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. தஞ்சை பெரியகோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் வீரசோழபுரம் சிவன் கோயிலை கட்டியதாக வரலாறு.தந்தை இறந்த பின் ராஜேந்திர சோழன் அவருடைய அஸ்தியுடன் ராமேஸ்வரம் செல்ல கங்கைகொண்ட சோழபுரம் வழியாக வீரசோழபுரம் வந்துள்ளார். அங்கு இரவு துாங்கிய ராஜேந்திர சோழன் மறுநாள் பார்த்தபோது அவரது தந்தையின் அஸ்தி மல்லிகை பூவாக மாறி இருந்தது.இதையொட்டி அந்த இடம் மல்லிகா அர்ஜுனபுரம் என அழைக்கப்படுகிறது.
சோழ மன்னர்களின் தொடர்புகள் அதிகரிக்கவே வரலாற்றில் வீரசோழபுரம் என்ற பெயர் நிலைத்தது. அங்கு சிவாலய வரலாறுபடி சிவலிங்கத்தை சித்தர்கள் பிரதிஷ்டை செய்து பூஜித்துள்ளனர். அம்மன் சன்னதி நான்கு நந்திகள் இருந்துள்ளன.சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயில் பல்லவர்கள் காலத்தில் புனரமைக்கப்பட்டது. சிவனுக்கு நகரீஸ்வரமுடைய நாயனார் என ராஜேந்திர சோழன் பெயர் சூட்டியதாக கல்வெட்டில் உள்ளது. காலப்போக்கில் மருவி அர்த்த நாரீஸ்வரர் அனுதாம்பிகை என அழைக்கப்பட்டு வருகிறது.ராஜராஜ சோழன் பரம்பரையினர் தெற்கு நோக்கி ராஜகோபுரம் கட்டுவதற்கு முற்பட்டனர். இப்பணியில் ஈடுபட்டவர் இறந்ததால் ராஜகோபுரம் கட்டுவது நிறைவு பெறாமல் உள்ளது.புராதன வரலாற்று சிறப்புமிக்க வீரசோழபுரம் சிவன் கோயில் பல நுாறு ஆண்டுகளாக முற்றிலும் பராமரிப்பின்றி தொன்மை இழந்து காணப்படுகிறது.
இக்கோயில் 25 ஆண்டுகளாக ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுபாட்டில் உள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமாக வீரசோழபுரம் எல்லை பகுதியில் ஆங்காங்கே 70 ஏக்கர் நிலமும், வி.பாளையம் கிராமத்தில் 10 ஏக்கர் நிலமும் உள்ளன.நிலங்களை குத்தகைக்கு விட்டு அதில் கிடைக்கும் வருவாயை வைத்து மாசி மகம் தீர்த்தவாரி உற்ஸவம் மற்றும் கோயில் பூஜை பணிகள் செய்யப்படுகின்றன.சிதிலமடைந்த கோயிலை திருப்பணிகள் செய்து புதுப்பிக்க வேண்டும் என வீரசோழபுரம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அறநிலைய துறையினர் புறக்கணித்து வருகின்றனர்.
திருடு போன சிலைகள்: கேட்பாரற்று கிடக்கும் இக்கோயிலில் அவ்வப்போது சுவாமி சிலைகள் திருடு போயின.திரிபுராந்தகர், திரிபுரசுந்தரி சிலைகள் மற்றும் சில ஐம்பொன் சிலைகள் 50 ஆண்டுகளுக்கு முன் திருடு போனதாக 2018 மே மாதம் வழக்கறிஞர் ராஜேந்திரன் சிலை திருட்டு மற்றும் தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்படி வழக்குப் பதியப்பட்டுள்ளது.
பாதுகாப்பாக சிலைகள்: அடிக்கடி சிலைகள் திருடு போனதை அடுத்து சிலைகளை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இக்கோயிலுக்கு சொந்தமான 13 சுாவமி சிலைகள் சில ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் உலோகதிருமேனிகள் பாதுகாப்பு மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமான பின் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வளாகம் கட்ட பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் வீரசோழபுரம் சிவன் கோயிலுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தில் 35 ஏக்கர் பரப்பளவிலான இடம் தேர்வு செய்யப்பட்டது. இங்கு கலெக்டர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், விளையாட்டு மைதானம் எஸ்.பி. அலுவலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன. இதற்காக வருவாய் துறைக்கு நிலத்தை விற்பனை செய்ய உள்ளனர்.
மதிப்பீடு குறைவு: நிலத்தின் மதிப்பீட்டை குறைத்து குறைவான விலைக்கு வருவாய் துறை வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது சந்தை மதிப்பில் 40 ஏக்கருக்கு 29.17 கோடி ரூபாய் என அறநிலைய துறையே கூறியுள்ளது.இந்த தொகையில் இருந்து 275 சதவீத தொகையை சேர்த்து நிலத்தை விற்பனை செய்ய வேண்டும். அதன்படி கோயில் நிலத்திற்கு 80.21 கோடி ரூபாய் வரை அறநிலைய துறை மதிப்பீடு செய்துள்ளது.ஆனால் கள்ளக்குறிச்சி கலெக்டரின் மதிப்பீட்டின் அடிப்படையில் வெறும் 1 கோடியே 98 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் மட்டுமே நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இது வீரசோழபுரம் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விற்பனைக்கு முன் அடிக்கல்: கோயில் நிலம் விற்பனையில் ஏதேனும் கருத்தோ மறுப்போ இருந்தால் நாளை 29க்குள் சென்னை அறநிலைய துறை ஆணையரிடம் எழுத்து மூலமாக தெரிவிக்கலாம் என அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால் கருத்து கேட்புக்கு முன்பாகவே அவசர அவசரமாக 23ம் தேதி கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளுக்கு முதல்வர் இ.பி.எஸ். அடிக்கல் நாட்டினார். விற்பனைக்கு முன்னரே கட்டுமான பணிகளை துவங்கி இருப்பது பக்தர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது. கோவில் நிலத்தை கபளீகரம் செய்து தான் கலெக்டர் அலுவலகம் கட்டப்பட வேண்டுமா; அரசுக்கு வேறு இடமே இல்லையா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மூடி மறைத்த நிர்வாகம்; கோவில் இடம் விற்பனை தொடர்பாக வீரசோழபுரம் கிராம மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.ஆனால் பிரச்னை ஏற்படாமல் இருக்க சென்னையில் நடைபெறும் கருத்து கேட்பு தொடர்பாக கிராமத்தில் முறையாக அறிவிப்பு செய்யவில்லை. விற்பனை குறித்து தண்டோரா அறிவிப்பு அல்லது பதாகைகள் எதுவும் வைக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.இதுகுறித்து எழுந்த சர்ச்சையால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சில நாட்களுக்கு பின்னர் பெயரளவில் கோவிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
அப்பட்டமான பொய்: அதில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரசோழபுரம் சிவன் கோவில் 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் என்றும் 12 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு பணிகள் நடைபெற்று இருப்பதாகவும் அறநிலையத் துறை அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விட்டுள்ளது.
சுட்டிக்காட்டிய தினமலர்: வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவில் சிதிலமடைந்து கேட்பாரற்று கிடப்பது குறித்தும் புனரமைக்க நடவடிக்கை தேவை எனவும் பல முறை நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை சிறிதளவும் மேற்கொள்ளப்படவில்லை.
அபகரிப்புக்கு சமம்!: கோவில் நிலத்தை, வருவாய் துறைக்கு விற்பனை செய்வதை கடுமையாக எதிர்க்கிறோம். நிலம், கோவில் பெயரிலேயே தொடர்ந்து இருக்க வேண்டும். நீண்ட கால ஒப்பந்தத்தில், வாடகைக்கு எடுத்து கொள்ளலாம். கோவில் நிலத்தின் மதிப்பீட்டை குறைத்து, அடிமாட்டு விலைக்கு வாங்குவது, அபகரிப்புக்கு சமமாகும்.
ஆகம விதிப்படி கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள, தற்போதைய நிலையில், 7 கோடி ரூபாய் வரை தேவை. வருவாய் துறைக்கு விற்பனை செய்தால் கிடைக்கும் தொகையை வைத்து, திருப்பணிகள் செய்ய முடியாது. கருத்து கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்க உள்ளோம். - தெய்வீகன், 57,முன்னாள் ஊராட்சி தலைவர்,வீரசோழபுரம்.
எட்டிப் பார்க்காத அதிகாரிகள்!: சிவன் கோவிலை மீட்டெடுத்து, திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும். வருங்கால சந்ததியினர் வழிபட, பயன்பாட்டிற்கு வர வேண்டும்.பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள், பரிகார பூஜை செய்வதற்கு, இக்கோவிலுக்கு வருகின்றனர். ஆனால், கோவிலின் நிலையை பார்த்து, மிகவும் வேதனை அடைகின்றனர்.
கோவிலுக்கு சொந்தமான நிலத்தை பார்க்க, பலமுறை சென்ற அதிகாரிகள், ஒருமுறை கூட, கோவிலை வந்து எட்டிப் பார்க்கவில்லை.- ஜெயராமன், 44 வீரசோழபுரம்.
வேதனை அளிக்கிறது!: மிக பிரமாண்டமாக காணப்பட்ட கோவிலின் தற்போதையை நிலையை காணும் போது, மிகவும் வேதனை அளிக்கிறது. கோவிலை புனரமைத்து, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சுப்ரமணியன், 72 வீரசோழபுரம்.
தி.மு.க., ஆட்சியிலும் நிலம் பறிப்பு!: ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது: முந்தைய தி.மு.க., ஆட்சி காலத்திலும், இதுபோன்ற கருத்து கேட்பு இன்றி, அரசு திட்டங்களுக்காக, கோவில் நிலங்கள் கையகப்படுத்தப் பட்டுள்ளன. திருவாரூரில் மத்திய பல்கலை அமைக்க, திருவாரூர் கோவிலுக்கு சொந்தமான, 293 ஏக்கர் நிலம், 2009ல் தன்னிச்சையாக கையகப்படுத்தப்பட்டது. ராமநாதபுரம் முதுகுளத்துார் சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு சொந்தமான, 4,500 சதுர அடி நிலம், 2007ல் தன்னிச்சையாக கையகப்படுத்தப்பட்டது. தர்மபுரி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 21.39 ஏக்கர் நிலம், 2009ல், அரசு அதிகாரிகளால் தன்னிச்சையாக எடுக்கப்பட்டது. இதேபோல, பல்வேறு திட்டங்களுக்காக, முந்தைய தி.மு.க., ஆட்சிக்காலத்தில், அடாவடியாக கோவில் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன.கோவில் நிலங்களை கையகப்படுத்துவதை கட்டுப்படுத்த, உயர் நீதிமன்ற தீர்ப்பு, அரசாணை இருந்தும், அதிகாரிகள் இப்படி செயல்படுவது தொடர்கிறது. இந்த அடாவடி போக்குக்கு, முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தை அனுப்புங்க!: கள்ளக்குறிச்சி, வீரசோழபுரம் சிவன் கோவில் இடத்தில், கலெக்டர் அலுவலகம் கட்ட, முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார். அந்த இடம், அறநிலைய துறையிடம் இருந்து, இன்னும் வாங்கப்படவில்லை. இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம், அறநிலைய துறை ஆணையர் அலுவலகத்தில், நாளை காலை, 10:00 மணிக்கு நடக்க உள்ளது.
இந்நிலையில், கோவில் இடத்தை விற்பதற்கு, ஆட்சேபம் தெரிவிப்போர், இன்றைக்குள், ommr.hrce@tn.gov.in என்ற, இ-மெயில் முகவரிக்கு, தங்கள் கருத்தை அனுப்பலாம்.
அதன் நகலை, veeracholapuram@OurTemplesOurPrideOurRight என்ற, இ- மெயில் முகவரிக்கு அனுப்பவும்; இது, அவசரம் என, ஆன்மிக அன்பர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இ - மெயில் இல்லாதவர்கள், ஆணையர், இந்து சமய அறநிலைய துறை,119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 34 என்ற முகவரிக்கு, விரைவு தபாலில் அனுப்பலாம் என்றும், அவர்கள் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர்.