பதிவு செய்த நாள்
04
நவ
2020
11:11
திருப்பதி:திருப்பதியில் அளிக்கப்பட்டு வரும், இலவச நேர ஒதுக்கீடு தரிசன, டோக்கன் எண்ணிக்கையை, தேவஸ்தான நிர்வாகம், 6,000 ஆக அதிகரித்து உள்ளது.
ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்சில், திருப்பதி, திருமலை தேவஸ்தானம், ஏழுமலையான் தரிசனத்துக்காக இலவச நேர ஒதுக்கீடு டோக்கன்களை அளித்து வருகிறது. விதிமுறைஒரு சில காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்ட இந்த டோக்கன்கள், கடந்த வாரம் முதல் மீண்டும் வழங்கப்பட்டு வருகின்றன. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில், தினமும், 3,000 டோக்கன்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், கடந்த, 31ல், இந்த டோக்கன்களை பெற, பக்தர்கள் அதிக அளவில் கூடினர். இதனால், கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, திருப்பதியில் அளித்து வந்த இலவச தரிசன டோக்கன்களை, மீண்டும் தற்காலிகமாக ரத்து செய்வது குறித்து, தேவஸ்தான அதிகாரிகள் கலந்தாலோசித்தனர்.
அதன்பின், நேற்று தேவஸ்தானம் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது. இதுவரை தினசரி, 3,000 மட்டுமே வழங்கப்பட்டு வந்த இலவச நேர ஒதுக்கீடு டோக்கன்களின் எண்ணிக்கை, நேற்று முதல், 6,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னுரிமைமுதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையை விடுத்து, நேர கட்டுப் பாடு இன்றி, யார் எப்போது வந்தாலும், டோக்கன் இருக்கும் நாட்களில் அதை முன்பதிவு செய்யலாம். இரண்டு நாட்களுக்கு பின் தரிசன நேரத்துக்கான டோக்கன் கிடைத்தாலும், பக்தர்கள் அதை பெற்று, இரு நாட்கள் திருப்பதியில் தங்கி, ஏழுமலையானை தரிசித்து செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது.