பதிவு செய்த நாள்
04
நவ
2020
12:11
வாலாஜாபாத் : கொரோனா ஊரடங்கால், குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை விழாவிற்கு, சிறப்பு ஏற்பாடுகள் இன்றி, சாதாரண விழாவாக நடத்துவதற்கு, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் முடிவு செய்து உள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், குரு பரிகார ஸ்தலம் என அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. இங்கு, குரு, நவ.,15ம் தேதி, இரவு, 9:49 மணிக்கு, தனுசு ராசியில் இருந்து, மகர ராசிக்கு இடம் பெயர்கிறார்.இந்த குரு பெயர்ச்சி விழாவிற்கு, வருகை தரும் பக்தர்களுக்கு, பாதுகாப்பு மற்றும் குடிநீர் உள்ளிட்ட பல வித அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கு, பல துறை அதிகாரிகள் சிறப்பான ஏற்பாடு செய்து வந்தனர். நடப்பாண்டு, கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், குருபெயர்ச்சி லட்சார்ச்னை விழாவிற்கு, சிறப்பு ஏற்பாடுகள் ஏதுவும் செய்யவில்லை.அதற்கு பதிலாக, சுவாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுமையாக கடை பிடிக்கப்படும் என, கோவில் செயல் அலுவலர் வெங்கடேசன் தெரிவித்தார்.