கம்பம் : கம்பம் பகவதியம்மன் கோயில் திருவிழாவில் பெண்கள் மாவிளக்கு எடுத்து, பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கம்பம் காமுகுல ஒக்கலிக மகாஜன சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பகவதியம்மன் கோயில் திருவிழாவில் நேற்று முன்தினம் புதிதாக செய்த அம்மன் சிலை ஊர்வலமாக எடுத்துவரப் பட்டு கோயிலில் வைக்கப்பட்டது. முன்னதாக மஞ்சள் நீராட்டம் நடைபெற்றது. பெண்கள ஏராளமானோர் கோயில் வளாகத்தில் மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செய்தனர்.நேற்று காலை நுாற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடத்தி முல்லைப் பெரியாற்றில் கரைத்தனர். வண்டிவேஷம் என்னும் சிறப்பு நிகழ்ச்சி மாலை நடைபெற்றது. நுாற்றுக்கணக்கான டிராக்டர்களில் பல்வேறு கடவுள்கள்போல் வேடமணிந்து வந்தனர். பின்னர் அம்மன் ஊர்வலம் நடந்து சிலை முல்லைப்பெரியாற்றில் கரைக்கப்பட்டது. ஒக்கலிகர் சமுதாயம் சார்பில் அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சமுதாய நாட்டாண்மை காந்தவன், ஒக்கலிகர் சங்க செயலாளர் தாத்துராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.