பதிவு செய்த நாள்
16
நவ
2020
06:11
சென்னிமலை: சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நடப்பாண்டு கந்த சஷ்டி விழா, கொரோனா வைரஸ் தடுப்பு கட்டுப்பாடுகளுடன் நேற்று தொடங்கியது.
வழக்கமாக சஷ்டி தொடக்க விழாவில், சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து, உற்சவமூர்த்திகளை படிக்கட்டுகள் வழியாக மலைக்கோவிலுக்கு அழைத்துச் செல்வர். நடப்பாண்டு ரத்து செய்யப்பட்டது. வழக்கமாக அதிகாலை கோமாதா பூஜையை தொடர்ந்து, காலை, 10:30 மணிக்கு கலச ஸ்தாபனம், யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதையொட்டி முருகப்பெருமானுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. மயில் வாகனத்துக்கு காப்பு கட்டிய பின், முருக பெருமானுக்கு காப்பு கட்டி, பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவசச்சாரியார் காப்பு கட்டினார். இதில் பெண்கள் அதிக அளவில் காப்புக் கட்டிக் கொண்டனர். இவர்கள் அனைவரும் ஆறு நாட்கள் விரதம் கடைப்பிடிப்பார்கள். கொரோனாவால் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தாலும், விழா தொடக்க நாள் என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
மகிமாலீஸ்வரர் கோவிலில்...: ஈரோடு டி.வி.எஸ்., வீதயில் உள்ள மகிமாலீஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை, கணபதி ஹோமம் மற்றும் யாக பூஜையுடன், சஷ்டி விழா தொடங்கியது. மூலவர் முருகன் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், மஹா தீபாராதனை, சண்முகார்ச்சனை, காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. கொரோனா தொற்றால், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம் சஷ்டி விரதம் மேற்கொள்வோர், வீடுகளில் இருந்தபடியே, காப்பு கயிறு கட்டி, விரதமிருக்க அறிவுறுத்தப்பட்டனர். இதேபோல், திண்டல் வேலாயுத சுவாமி கோவிலில், வெளி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, சன்னதிக்குள் மட்டும் விழா நடந்தது. மூலவர் வேலாயுத சுவாமி, உற்சவர் வள்ளி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டு பூஜை நடந்தது.
பச்சமலை, பவளமலையில்...: கோபி பச்சமலை முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழாவையொட்டி, காலை, 7:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து சுப்ரமணியர், வீரபாகுடன், ஆகம விதிப்படி, யாகசாலைக்கு புறப்பாடு நடந்தது. விநாயகர் பூஜை, மகாசங்கல்பம் நடந்தது. பின் நடந்த, காப்பு கட்டும் நிகழ்வில், சிறுவர், சிறுமியர் முதல், ஏராளமான பக்தர்கள், அர்ச்சகரிடம் காப்பு கட்டி கொண்டனர். பின், சண்முகருக்கு சிறப்பு அர்ச்சனை நடந்தது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கோவில் நிர்வாகம் சார்பில், கிருமி நாசினி திரவம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. முக கவசம் அணிந்தபடி பக்தர்கள் காப்பு கட்டி கொண்டனர். இதேபோல் பவளமலை முருகன் கோவிலிலும், கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார விழா துவங்கியது.