சபரிமலை : புதிய மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கியது. கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பக்தர்கள் தரிசனம் நடத்தி திரும்பினர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை முதல் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜைகள் ஒரு மண்டல காலம் என அழைக்கப்படுகின்றன. கார்த்திகை முதல் தேதியான நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடை திறந்து தீபம் ஏற்றினார். அப்போது பக்தர்கள் சரணகோஷமிட்டனர். தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு அய்யப்பனுக்கு பல்வகை அபிஷேகங்கள் நடத்திய பின் நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கணபதி ஹோமமும் வழக்கமான உஷபூஜை உச்சபூஜை தீபாராதனை புஷ்பாபிஷேகம் அத்தாழபூஜை போன்றவையும் நடந்தன.
இனி வரும் 40 நாட்களிலும் தினமும் அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கும். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். டிச. 26-ம் தேதி மண்டலபூஜை நடைபெறுகிறது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது மண்டல காலம் அமைதியாக தொடங்கியது. நுாற்றுக்கணக்கில் மட்டுமே பக்தர்கள் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்படுவதால் வழக்கத்தை விட மாறுபட்ட நிலை காணப்பட்டது. காலை 9:00 மணிக்கு சபரிமலையை பக்தர்களே சுத்தமாக பராமரிக்கும் புண்ணியனம் பூங்காவனம் திட்டத்தை தந்திரி கண்டரரு ராஜீவரரு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.பக்தர்கள் நேரடியாக நெய்யபிஷேகம் நடத்த செல்ல முடியாது என்பதால் அதற்கான சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டிருந்தன. ஒரு முறை தரிசனம் செய்தவர்கள் மீண்டும் செல்லமுடியாது. பக்தர்கள் தங்கள் வழிபாடுகளை நடத்தவும் வழிபாட்டு பொருட்களை சமர்ப்பிக்கவும் கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு எல்லா நாட்களிலும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் பக்தர்களுக்கு அனுமதியா?: சபரிமலையில் மண்டல கால ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது: கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டும் கேரள ஐகோர்ட் உத்தரவின் படியும் சபரிமலையில் மண்டல காலத்தில் வரும் பக்தர்களுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்காக குடிநீருக்கு சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பம்பையில் திறக்கப்பட்டுள்ள சிறப்பு கவுண்டரில் 200 ரூபாய் செலுத்தினால் ஸ்டீல் பாட்டிலில் ஒரு லிட்டர் தண்ணீர் கிடைக்கும். தரிசனம் முடிந்து திரும்பும் போது கவுன்டரில் அந்தபாட்டிலை திருப்பி கொடுத்தால் பணம் திரும்ப கிடைக்கும். சரல்மேடு ஜோதிநகர் மாளிகைப்புறம் ஆகிய இடங்களில் பாட்டிலில் தண்ணீர் நிரப்புவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. பம்பை முதல் சன்னிதானம் வரை உள்ள பாதையில் ஐந்து இடங்களில் அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பம்பையில் 20 ஆம்புலன்சுகள் உள்ளன. சபரிமலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள பக்தர்கள் வந்து செல்வது கண்காணிக்கப்படும். கூடுதல் பக்தர்களை அனுமதிக்கலாம் என்ற நிலை உருவானால் சுகாதாரத்துறை மற்றும் முதல்வர் பினராயி விஜயனிடம் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.