சபரிமலையில் பக்தர்களுக்கு தேவையில்லாத கட்டுப்பாடுகளை ஏற்படுத்த கூடாது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2020 02:11
தேனி: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு கேரள அரசு தேவையில்லாத கட்டுப்பாடுகளை ஏற்படுத்த கூடாது, என ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
தேனியில் ஹிந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வ.உ.சி.,நினைவு தினம் மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமையில் நடந்தது. அவரது படத்திற்கு ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மாலையணிவித்த பின் கூறியதாவது:மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றக்கோரி கையெழுத்து இயக்கம் நடத்தி ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்ப உள்ளோம். கொரோனாவை காரணம் காட்டி சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு கேரள அரசு, தேவசம் போர்டு பல கட்டுப்பாடுகளை விதித்து சிரமப்படுத்துகிறது. ஒரு நாளைக்கு 2000 பேர் அனுமதி என்பதை 10,000 மாக அனுமதிக்க வேண்டும். திருப்பதியில் 15,000 பேர் அனுமதிக்கின்றனர். கொரோனா பரிசோதனையை கேரள அரசு இலவசமாக செய்து 3 மணிநேரத்தில் முடிவு வழங்க வேண்டும். நெய் அபிேஷகம், பம்பையில் புனித நீர் தெளித்து கொள்ள அனுமதிக்க வேண்டும். தேவையில்லாத கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். இதை வலியுறுத்தி கேரள அரசிடம் வழங்க மாநில செக் போஸ்ட்களில் நவ. 23 ல் மனு அளிக்கப்படும்.திருவண்ணமாலை கிரிவலம், பழநி சூரசம்ஹாரம் என கோயில் விழாக்களில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷா யாரையும் அச்சப்படுத்துவதற்காக சென்னை வரவில்லை. தமிழகத்தில் ஆன்மிக அரசியலை கொண்டுவருவதற்காக வருகிறார், என்றார்.