சபரிமலையில் கடும் கட்டுப்பாடு: நவ.25ல் வீடுகளில் நாமஜெபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2020 09:11
சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் மீது திணிக்கப்படும் கடும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக கேரள அரசை கண்டித்து நவ.25ம் தேதி 5000 வீடுகளில் ஐயப்ப நாம ஜெப வேள்வி நடைபெறும் என ஐயப்பா சேவா சமாஜம் அறிவித்துள்ளது.
இது குறித்து ஐயப்பா சேவா சமாஜ தலைவர் இலந்துார் ஹரிதாஸ் கூறியதாவது: கொரோனா கட்டுப்பாடுகள் என்ற பெயரில் சபரிமலையில் பழங்காலம் முதல் இருந்து வரும் ஆசாரங்களை தகர்க்க பினராயி விஜயன் அரசு முயற்சிக்கிறது.பம்பையில் குளிக்க கூடாது பலி தர்ப்பணம் கூடாது சன்னிதானத்தில் பஸ்ம குளத்தில் குளிக்க கூடாது நெய்யபிஷேகம் நடத்த முடியாது உரல்குழி தீர்த்தத்தில் குளிக்க கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கோவில் வழிபாட்டில் முக்கியமாக பக்தர்கள் தட்சணை கொடுக்க முடியாமல் தடுக்கப்பட்டுள்ளது.
அப்பாச்சிமேடு சரங்குத்தியில் ஆசாரங்களை நிறைவேற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பக்தர்களுக்கு மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அரசுக்கு இதை உணர்த்தும் வகையில் நவ.25-ல் பத்தணந்திட்டை மாவட்டத்தில் 5000 வீடுகளில் ஐயப்பன் சகஸ்ரநாம ஜெபம் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்பதிவு முடிந்தது: கொரோனாவால் தடைபட்ட சபரிமலை படிபூஜை தற்போது தினமும் நடந்து வருகிறது. சபரிமலையில் நடக்கும் பூஜைகளில் அதிக செலவு கொண்டது படிபூஜை. தேவசம்போர்டுக்கு மட்டும் 75 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். 18 படிகளிலும் பட்டு விரித்து தேங்காய் பூவைத்து குத்துவிளக்கேற்றி ஒரு மணி நேரம் தந்திரி தலைமையில் இந்த பூஜை நடக்கும். படி பூஜைக்கான முன்பதிவு 2034 ஆண்டு வரை முடிந்து விட்டது.பொதுவாக மண்டல மகரவிளக்கு காலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் தை 2 வரை படிபூஜை நடைபெறாது. கொரோனா காரணமாக கடந்த எட்டு மாதங்களில் 50-க்கும் மேற்பட்ட படிபூஜைகள் முடங்கின.இந்த பூஜை தற்போது தினமும் நடந்து வருகிறது. சபரிமலையில் மற்றொரு முக்கிய பூஜையான உதயாஸ்தமன பூஜைக்கு 40 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு 2027 வரை முன்பதிவு முடிந்துள்ளது.
நிதி நெருக்கடியில் தேவசம் போர்டு: கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சபரிமலையில் வருமானம் கடுமையாக குறைந்ததால் நிதி நெருக்கடியில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு திணறி வருகிறது. இதை சமாளிக்க 150 கோடி ரூபாய் தரவேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து தேவசம்போர்டு தலைவர் வாசு கூறியதாவது:மண்டல மகரவிளக்கு சீசனை நடத்த 60 கோடி சம்பளம் ஓய்வூதியம் கொடுக்க 50 கோடி ரூபாய் வேண்டும். தற்போதைய நிதி நெருக்கடியை சமாளிக்க அரசிடம் 150 கோடி ரூபாய் கேட்டுள்ளோம். இதுவரை போர்டுக்கு 350 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.தேவசம்போர்டின் பெரும்பகுதி வருமானம் சபரிமலை வாயிலாக கிடைத்தது. பக்தர்களை கூடுதலாக அனுமதித்தால் மட்டுமே வருமானம் அதிகரிக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் கடைபிடிக்க வேண்டும். அரசிடம் தேவசம்போர்டு விஷயத்தை விளக்கியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
ஏமாற வேண்டாம்: மேலும் சபரிமலை தேவஸ்தான போர்டு வெளியிட்டுள்ள அறிவிப்பு:சபரிமலை அய்யப்பன் கோவிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கொரோனா பரிசோதனை பிரசாதம் ஆகியவற்றுக்கான கட்டணம் என சில முன்பதிவு மையங்கள் பணம் வசூலிப்பதாக தகவல் வந்துள்ளது.சபரிமலை அய்யப்பன் கோவில் சாமி தரிசன ஆன்லைன் முன்பதிவுக்கு தேவஸ்தானம் கட்டணம் எதுவும் வசூல் செய்வதில்லை. இச்சேவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.