பதிவு செய்த நாள்
20
நவ
2020
11:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா இன்று (நவ.,20ல்) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா தடங்கலின்றி நடக்க வேண்டி, முதலில் நகர காவல் தெய்வமான துர்க்கையம்மனுக்கு, உற்சவம் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கால், சுவாமி மாடவீதி உலா ரத்து செய்யப்பட்டுள்ளது. 18ல், கோவில் பரிவார தேவதையான பிடாரியம்மன் உற்சவம், 19ல், விநாயகர் உற்சவம் நடைபெற்றது. இன்று அருணாசலேஸ்வரர் கோவிலில், தங்கக்கொடி மரத்தில், கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. இதையொட்டி பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர், தங்கக்கொடி மரத்தின் முன் எழுந்தருளினர். தொடர்ந்து கோவில் உட்பிரகாரங்களில் வெள்ளி விமானங்களில், வீதி உலா நடக்கும். வழக்கமாக ஆறாம் நாள் விழாவில், பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடக்கும். நடப்பாண்டு கொரோனாவால் ரத்து செய்யப்பட்டு, கோவிலில் உள்பிரகாரத்தில் பஞ்ச மூர்த்திகள் உலா நடக்கிறது. 29ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபம், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.