தீப திருவிழாவில் போலீஸ் கெடுபிடி: திருவண்ணாமலை நகரம் ‘வெறிச்’
பதிவு செய்த நாள்
28
நவ 2020 07:11
திருவண்ணாமலை: கொரோனா ஊரடங்கால், தீப திருவிழாவில் வெளியூர் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு, நகரில் யாரையும் அனுமதிக்காமல், போலீஸ் கெடுபிடி செய்வதால், திருவண்ணாமலை நகரம் வெறிச்சோடி உள்ளது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், தீப திருவிழாவை காண ஆண்டுதோறும், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவர். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால், தீப திருவிழாவை காண, வெளியூர் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. சில வெளியூர் பக்தர்கள், கடந்த வாரமே, திருவண்ணாமலை வந்து, லாட்ஜ்களில் தங்கியுள்ளனர். 30ம் தேதி வரை வெளியூர் பக்தர்கள், முற்றிலும் வர தடை உள்ளதால், நகரின் உள்ளே வரும் பாதைகளில், மாவட்ட எல்லைகளிலேயே, 15 இடங்களில் செக்போஸ்ட் அமைத்து, வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
திருவண்ணாமலை நகர் வழியாக, வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், நகரினுள் அனுமதிக்கப்படாமல், புதிய பைபாஸ் சாலை வழியே அனுப்பப்படுகின்றன. நகரினுள் ஆங்காங்கே இரும்பு பேரிகாட்கள் வைத்து, உள்ளூர் மக்களே மற்ற பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாமல், தடுத்து நிறுத்தி, போலீசார் கெடுபிடி செய்து வருகின்றனர். சாலையோர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண நாட்களில் உள்ள மக்கள் நடமாட்டம் கூட இல்லாததால், திருவண்ணாமலை நகரமே, வெறிச்சோடி காணப்படுகிறது.
|