பதிவு செய்த நாள்
29
நவ
2020
04:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவின் 10ம் நாளான இன்று (நவ.29) அதிகாலை 03.30 மணி அளவில் ஸ்வாமி சன்னதி மூல கருவறை முன் “ ஏகன் அனேகன்” என்பதை குறிக்கும் வகையில் 5 மடக்குகளில் பஞ்சமுகதீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
பின்பு அதிகாலை நான்கு மணிக்கு நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகிய பஞ்ச பூதங்கள், சிவபெருமான் ஒருவனே அதாவதுஏகன், அனேகன் என்பதை கூறும் வகையில், சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் குருக்கள் கையில் ஏந்தி, பரணி தீபம் மடக்கில் ஜோதி ரூபமாய் வெளிபிரஹாரம் வலம் வந்த போது ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி கோஷத்துடன் தரினசம் செய்தனர்.
பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும், மலை வடிவில் ஜோதியாக காட்சி அளித்தல் மற்றும், பார்வதிக்கு, சிவபெருமான் இட பாகம் வழங்கிய நாளை, நினைவு கூறும் வகையில், ஆண்டு தோறும், திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா நடந்து வருகிறது.இதன், முக்கிய நிகழ்ச்சியாக, அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை, 4:00 மணிக்கு, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களும், சிவபெருமான் ஒருவனே, என்பதை கூறும் வகையில், சுவாமி கருவறை எதிரில், ஏகன், அனேகன் என்ற பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதனிடையே அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீபம் ஏற்றப்பட உள்ள கொப்பரை அண்ணாமலையார் மலை உச்சிக்கு நேற்று காலை கொண்டு செல்லப்பட்டது. மஹா தீப கொப்பரைக்கு, கோவிலில் சிறப்பு பூஜை செய்து, அண்ணாமலையார் மலை உச்சிக்கு, 20க்கும் மேற்பட்டோர் அதை சுமந்து சென்றனர். மஹா தீபத்துக்கு, 1,000 மீட்டர் காடா துணியால் ஆன திரி, 500 கிலோ நெய், 10 கிலோ கற்பூரம் ஆகியவையும் மலை உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டன.விழாவை முன்னிட்டு, கோவில் வளாகம் முழுதும் வண்ண மின்விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தீப திருவிழா பாதுகாப்பு பணியில், 2,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர். இன்று ஞாயிறு மாலை 6 மணியளவில் விழாவின் முத்தாய்ப்பான நிகழ்வான மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதையடுத்து 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். எனினும் கொரோனா அச்சம் காரணமாக மகாதீப நிகழ்வின் போது பக்தர்கள் மலையேறவும் கிரிவலம் சுற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேரடி ஒளிபரப்பு: திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, விழாவில் அரசு உத்தரவுப்படி பொதுமக்கள் அனுமதியில்லை. எனவே கோயில் வலைத்தளம் http://www.arunachaleswarartemple.tnhrce.in/ மற்றும் https://www.youtube.com/channel/UC2dzxD-qouX44-N1nowCeKg ஆகியவற்றில் நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.