பதிவு செய்த நாள்
30
நவ
2020
09:11
சென்னை: கொரோனா நோய் தடுப்பு பாதுகாப்பை முன்னிட்டு, சிவாலயங்களில், கார்த்திகை தீப திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் நடந்தது. கார்த்திகை மாத பவுர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் இணைந்த நாளில், தமிழர்கள் இல்லங்களிலும், கோவில்களிலும், தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் விழா, தீபத் திருநாள். கார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என, மூன்றாக கோவில்களிலும் வீடுகளிலும் கொண்டாடுவர். அதன்படி, நேற்று தீப திருவிழா கொண்டாடப்பட்டது.
வடபழநி ஆண்டவர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், ராஜகோபுரம் எதிரில் சொக்கப்பனை கொளுத்தி, தீபமேற்றி வழிபாடு நடந்தது. திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, தைலாபிஷேகம், கவசம் திறப்பு நடந்தது. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில், தீபம் ஏற்றி பக்தர்கள் இன்றி எளிமையாக கொண்டாடப்பட்டது. நேற்று மாலை, அனைத்து வீடுகளிலும், அகல் விளக்கு ஏற்றி, பொரி உருண்டை, கடலை உருண்டை , அப்பம் செய்து, படைத்து வழிபாடு நடத்தினர்.