பதிவு செய்த நாள்
30
நவ
2020
09:11
தேனி : திருக்கார்த்திகையை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. மஹா தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
தேனி வேல்முருகன் கோயில், மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில், அஷ்டதிரி பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. இரவில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.போடி: போடி பரமசிவன் மலைக்கோயிலில் சிங்காரவேலன் பழநி பாதயாத்திரை குழு குருநாதர் சுருளிவேல் தலைமையில் நடந்தது. தலைவர் ஜெயராமன், செயலாளர் குமார், துணைத்தலைவர் முருகன் முன்னிலை வகித்தனர். நகரில் இருந்து பார்த்தால் ஜோதி தெரியும் படி 171 கிலோ எடையுள்ள திரி மூலம் 702 லிட்டர் நெய் ஊற்றி அரோகரா கோஷத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது.
சிவன், முருகன், லட்சுமி நாராயணனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. போடி கீழச்சொக்கநாதர் கோயில், மேலச்சொக்கநாதர் கோயில், வினோபாஜிகாலனி மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் சிவனுக்கு, போடி சுப்பிரமணியர் கோயிலில் முருகனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
கம்பம்: சிவனடியார் முருகன் சுவாமிகள் இதனை செய்தார். மகாதீபம் ஏற்றப்பட்டது.பக்தர்கள் கோயில் வளாகத்தில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
தேவதானப்பட்டி: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தேவதானப்பட்டி மலைமேல் பரமசிவன் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பெரியகுளம்: தென்மாவட்டத்தின் திருவண்ணாமலை எனப்படும் பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோயிலில் 9ம் ஆண்டு மகாகார்த்திகை தீபத்திருவிழா நடந்தது.காலை விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. ரிஷப கொடியேற்றுதல் பாலதீபம் ஏற்றப்பட்டது. மூலவர் பெரியநாயகி உடனுறை, கைலாசநாதர் ராஜஅலங்காரத்தில் காட்சியளித்தனர்.ராஜா பட்டர் தலைமையில் பூஜை நடந்தது. அன்பர் பணிசெய்யும் பராமரிப்புக்குழுத்தலைவர் வி.ப.ஜெயபிரதீப் , 500 கிலோ நெய் ஊற்றிய கொப்பறையில் மகா தீபம் ஏற்றினார். துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார்.அன்பர் பணிக்குழுசெயலாளர் சிவக்குமார், அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.ஸ்ரீ குருதட்சிணாமூர்த்தி சேவா சங்கம் ஆலோசகர் சி.சரவணன்-எஸ்.சித்ரா அன்னதானம் வழங்கினார்.