பதிவு செய்த நாள்
01
டிச
2020
03:12
திருவண்ணாமலை: அண்ணாமலையார் மலை மீது ஏற்றப்பட்ட மஹா தீபத்தை, வெளியூர் பக்தர்கள், நகர எல்லையில் நின்றவாறு தரிசித்து, ஊர் திரும்பினர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவில் நேற்று, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை மீது, மகா தீபம் ஏற்றப்பட்டது. இது, 40 கி.மீ., தூரம் வரை தெரிந்தது. மாவட்ட நிர்வாகத்தின் தடையால், திருவண்ணாமலை நகருக்குள் வர முடியாத வெளியூர் பக்தர்கள், நகரின் எல்லையில் நின்று, மலையை நோக்கி நெய் தீபம் ஏற்றி வழிபட்டு, மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபத்தை தரிசனம் செய்து பின், சொந்த ஊர் திரும்பினர். இந்த மகா தீபம், 11 நாட்கள் தொடர்ந்து எரியும். பின் இந்த கொப்பரையில் சேகரிக்கப்படும் தீப மை பிரசாதம், ஆருத்ரா தரிசனத்தன்று, நடராஜருக்கு முதலில் சாத்தப்பட்டு, நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மற்ற பக்தர்களுக்கு, ஒரு பாக்கெட், 10 ரூபாய் விலையில் கோவிலில் விற்கப்படும்.