சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொற்கூரை வெளிப் பிரகாரத்தில் சூழ்ந்த வெள்ள நீர் வடிந்தது. புரெவி புயலால் கடந்த நான்கு நாட்களாக பெய்யும் தொடர் மழையில் கடலுார் மாவட்டம் சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகங்கை குளம் நேற்று முன்தினம் நிரம்பி வழிந்தது. தண்ணீர் வடியாமல் கோவிலில் வெளிப் பிரகாரம், பொற்கூரை அமைந்துள்ள உள்பிரகாரத்தில் இடுப்பளவு வெள்ள நீர் சூழ்ந்தது. சிதம்பரம் நகராட்சி நிர்வாகம் சார்பில், வடிகால் சுரங்கம் வழியாக மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றும் பணியை துவங்கினர். அப்பணி நேற்று முழுதும் நடந்தது. இதனால் உள்பிரகாரத்தில் தேங்கிய மழை நீர் குறையத் துவங்கியது. உள்பிரகாரத்தில் இருந்த தண்ணீர் முற்றிலும் வடிந்தது. தீட்சிதர்கள் நிம்மதி அடைந்தனர். பொற்கூரை வளாகத்தில் தண்ணீர் வடிந்ததால் நேற்று முதல் மீண்டும் பக்தர்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.