உலகேஸ்வர சுவாமி கோவில் திருப்பணி தாமதம்: பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2020 05:12
பல்லடம்: அல்லாளபுரம் கோவில் திருப்பணியை விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லடம் அருகே, நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அல்லாளபுரம் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் கோவில் சிதிலமடைந்து இருந்தது குறித்து பக்தர்கள் வேதனையுடன் இருந்தனர். பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கடந்த,2018 ஜூன் மாதம் பாலாலய கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு மூலவர் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, கோவில் புனரமைப்பு பணிகள் இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. கும்பாபிஷேகம் தாமதம் ஆகி வருவது பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து அவர்கள் கூறுகையில், அல்லாளபுரம் சிவன் கோவில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று கோவிலாகும். சுற்று வட்டாரத்தை சேர்ந்த பல்வேறு கிராம மக்களும் இக்கோவிலில் வழிபட்டு வருகிறோம். அறநிலைய துறை கண்டுகொள்ளாமல் விட்டதால் கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. தொடர்ந்து வலியுறுத்தியதால் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு, பணிகள் மந்த கதியில் நடந்து வருகிறது. மூலவர் வெளியே வைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக தற்காலிக பூஜைகளே நடந்து வருகின்றன. பணிகள் நிறைவடையவுற்ற நிலையில், கும்பாபிஷேகம் குறித்த அறிவிப்பை அதிகாரிகள் வெளியிடாமல் உள்ளனர். புனரமைப்பு பணிகளை விரைந்து முடித்து உடனடியாக கும்பாபிஷேகத்தை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.