பதிவு செய்த நாள்
10
டிச
2020
11:12
திருப்பூர் : கோவில் நிலத்தில் பொங்கல் வைக்க அனுமதிக்காததால், பக்தர்கள் ரோட்டில் பொங்கல் வைத்து, ஸ்ரீமாரியம்மனை வழிபட்டனர்.
திருப்பூர், பெரியாண்டிபாளையம் ஸ்ரீமாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா, கிராம சாந்தி மற்றும் பொரி மற்றும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கணபதிேஹாமம், படைக்கலம் எடுத்து வருதல் அம்மை அழைத்தல், கம்பம் நடுதல் நிகழ்ச்சிகள், விமரிசையாக நடந்தன.கடந்த 7ம் தேதி விநாயகர் பொங்கல் விழாவும், 8ம் தேதி, கிராம மக்களின் மாவிளக்கு ஊர்வலமும் நடைபெற்றது. நேற்று, பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது.கோவில் திருவிழாவின் போது, அருகே உள்ள கோவில் நிலத்தில், ஐந்து கிராம மக்கள் பொங்கல் வைத்து, அம்மனை வழிபடுவர். தற்போது, கோவில் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான பிரச்னை முடியாமல் இருக்கிறது.கோவில் நிலத்தில் பொங்கல் வைக்க அனுமதிக்காததால், ஐந்து கிராம மக்கள், பொங்கல் வைக்காமல், அம்மனை வழிபட்டு சென்றனர்.
சிலர் வீடுகளில் பொங்கல் வைத்து எடுத்து வந்து அம்மனுக்கு படையலிட்டனர். பெரியாண்டிபாளையம் கிராம மக்கள், கோவில் அருகே உள்ள ரோட்டில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.மதியம் அம்மனுக்கு சிறப்பு அலங்காரபூஜைகள் நடந்தன. நேற்று மாலை, சின்னாண்டிபாளையம் பக்தர்கள், அலகு குத்தி தேர் இழுத்து வந்து அம்மனை வழிபட்டனர். இன்று காலை, 10:00 மணிக்கு மஞ்சள் நீர் அபிேஷகமும், அலங்கார பூஜையும் நடைபெற உள்ளது.