பதிவு செய்த நாள்
12
டிச
2020
11:12
காரைக்கால்:திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவிற்கு, 10 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் வர வேண்டாம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: நவக் கிரகங்களில் ஒன்றான சனீஸ்வரர், வரும் 27ம் தேதி அதிகாலை, 5:22 மணிக்கு, தனுசு ராசியில் இருந்து, மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். பாதுகாப்புதற்போதைய கொரோனா சூழலில், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில், பாதுகாப்பான சனிப் பெயர்ச்சி விழா நடத்த, மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வரும், 19ம் தேதி முதல் ஜனவரி, 25ம் தேதி வரை, அனைத்து சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தரிசனம் செய்ய, ஆன்லைன் முன்பதிவு கட்டாயம். பக்தர்கள் இலவச தரிசனம், சிறப்பு தரிசனம், விரைவு தரிசனம் என்று தனித்தனியாக, தேவஸ்தான இணையதளத்தில் https://thirunallarutemple.org/sanipayarchi முன்பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் முன்பதிவு டிக்கெட், அதில் குறிப்பிட்ட அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். நளன் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் மற்றும் பிற தீர்த்தங்களில் நீராடவும், மத சடங்குகளுக்கும் அனுமதி இல்லை. அர்ச்சனைபக்தர்கள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தரிசனம் செய்ய மட்டுமே அனுமதி. சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் செய்யப்பட மாட்டாது. சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள், காய்ச்சல், இருமல், சுவாச பிரச்னை உள்ளிட்ட கொரோனா அறிகுறி உள்ளவர்கள், 10 வயதிற்கு உட்பட்ட மற்றும், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.