மகம் : பொது : இதுவரை ஐந்தாம் இடத்தில் வசித்து வந்த சனி பகவான் தற்போது ஆறாம் வீட்டிற்கு இடம் பெயர உள்ளதால் வாழ்வியல் நிலையில் மிகுந்த சௌகர்யத்தினைக் காண்பீர்கள். வாழ்க்கைத்தரம் மேம்படும். எல்லோரையும் அனுசரித்துச் செல்லும் குணம் உண்டாகும். அடுத்தவர் மனம் புண்படாதபடி பேசவேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருவீர்கள். உங்களின் வளர்ச்சி நிலை நண்பர்கள் மத்தியில் பொறாமை உணர்வை தூண்டக்கூடும். ஆயினும் அவர்களின் மன நிலையினைப் புரிந்துகொண்டு அவர்களையும் அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். மாற்றுமதத்தினைச் சார்ந்த நண்பர்கள் இக்கட்டான சூழலில் துணை நிற்பார்கள். சனிபகவான் ஆறாம் இடத்தில் அமர்வதால் மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வரும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் விரைவில் முடிவிற்கு வரும். நிதி : நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வரும் கடன் பிரச்னைகள் முடிவிற்கு வரும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். அசையாச் சொத்துக்களில் அதிக முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். வங்கி சார்ந்த கடனுதவிகள் தடையின்றி கிடைக்கும். பொதுவாக சனியின் ஆறாம் இடத்து அமர்வு நிதி நிலையை உயர்த்தும் வகையிலேயே அமைந்துள்ளது.
குடும்பம் : பங்காளிகளுக்குள் சச்சரவுகள் உருவாகும். பூர்வீக சொத்துக்களில் புதிய வில்லங்கங்கள் உருவாகக் கூடும். தகப்பனார் வழி உறவினர்களால் கலகம் பிறக்கலாம். உங்களைச் சுற்றியுள்ளவர்களில் நல்லவர், தீயவரை அடையாளம் கண்டு கொள்வீர்கள். சுயநலவாதிகளின் சகவாசத்தை அடியோடு துண்டித்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் மீது உங்கள் கருத்துக்களைத் திணிப்பதைத் தவிர்ப்பது நல்லது. அவர்களின் வாழ்வியல் தரம் உயரக் காண்பீர்கள்.
கல்வி : மாணவர்கள் அதிகமாக உழைக்க வேண்டிய நேரம் இது. அவ்வப்போது உடலில் தோன்றும் சோம்பலை நீக்கி அயராது உழைத்தால் மட்டுமே எதிர்பார்க்கும் வெற்றியை அடைய முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஃபேஷன் டெக்னாலஜி, கேடரிங் டெக்னாலஜி, ஆர்க்கிடெக்ட் பிரிவுகளைச் சார்ந்த மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் துறையைச் சேர்ந்தவர்கள் அதிக உழைப்பினை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். பெண்கள் : கணவரின் மனநிலையில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். குடும்பத்தில் உங்கள் பணிகள் மிகவும் முக்கியத்துவம் பெறும். அலுவலகத்திலும் சரி, குடும்பத்திலும் உங்களுக்கான பொறுப்பும் பதவியும் கூடும். வதந்தி பேசும் பெண்களிடம் இருந்து விலகி நிற்பீர்கள். மாமியார்&மருமகள் உறவில் இருந்து வந்த விரிசல் காணாமல் போகும். பிள்ளைகளின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுவீர்கள்.
உடல்நிலை : ஆறாம் இடத்தில் சனி பகவான் வந்து அமர்வதால் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. ஒரு சிலர் பரம்பரை வியாதிகளால் மிகுந்த அவதிக்குள்ளாக நேரிடலாம். பல்நோய், பித்தம் அதிகரிப்பு, வாய்வு பிடிப்பு ஆகியவற்றால் அடிக்கடி அவதிப்பட நேரிடும். உடலில் தோன்றும் பிரச்னைகளுக்கு ஆயுர்வேத மருத்துவம் உடனடி நிவாரணத்தைப் பெற்றுத் தரும் வகையில் அமையும்.
தொழில் : அரசாங்க உத்யோகஸ்தர்கள் அனுகூலமான நிலை காண்பார்கள். தொழில் முறையில் வெளிநாட்டு தொடர்பு உடையவர்கள் எதிர்பாராத நன்மை அடைவார்கள். சுயதொழில் செய்வோர், கட்டிடக்கலை நிபுணர்கள், டிராவல்ஸ் நடத்துபவர்கள், பழைய பொருட்களை வாங்கி விற்பவர்கள், அழகுக்கலை நிபுணர்கள், சமையல் கலைஞர்கள் ஆகியோர் சிறப்பான முன்னேற்றத்தினைக் காண்பார்கள். உணவுப் பண்ட வியாபாரம் செழிக்கும் என்பதால் ஹோட்டல் முதலாளிகள் தொழிலை அபிவிருத்தி செய்யும் வாய்ப்பினை அடைவார்கள். ஜவுளித்துறையில் இருப்பவர்கள் அதிக லாபத்திற்கு ஆசைப்படாமல் சரியாகக் கணக்கிட்டு குறைந்த லாபத்திற்கு வியாபாரம் செய்வதன் மூலம் தொழில் தொடர்ந்து சிறப்பாக நடந்துவரக் காண்பார்கள். ஆன்மிகப் பணிகளுக்காக அதிகளவில் செலவு செய்ய நேரிடலாம். பொதுவாக கடந்த மூன்று ஆண்டுகளை விட வரவிருக்கும் காலம் சிறப்பாக அமையும். நேரத்தினைப் பயன்படுத்திக் கொண்டு அயராத உழைப்பின் மூலம் சனிபகவானின் அருளுக்கு பாத்திரமாகி நற்பலனை அடைய வாழ்த்துக்கள். பரிகாரம் : சிறிய அளவிலான ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து பூஜித்து வாருங்கள். சிவவழிபாடு நன்மை தரும்.
பூரம் : பொது : சத்ரு, ரோகம், ருணம் என்றழைக்கப்படும் எதிரி, நோய் மற்றும் கடன்தொல்லை ஆகியவற்றைக் குறிக்கும் ஆறாம் இடத்திற்கு சனி பகவான் பிரவேசம் செய்ய உள்ளதால் இவை அனைத்தையும் சனி பகவானின் துணையுடன் வெற்றி கொள்வீர்கள். ஜாதகத்தில் சனியின் பலம் அதிகமாகக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிக அளவில் நற்பலன்கள் உண்டாகும் என்பதில் ஐயமில்லை. சனி பகவான் ஆறில் ஆட்சி பெற்ற நிலையில் சஞ்சரிப்பதால் தொழில்முறையில் இருந்து வரும் போட்டிகள் அகலும். உங்கள் காரியங்களுக்குத் தடையாக இருந்த நபர்கள் தானாக விலகிச் செல்வார்கள். முக்கியமான பணிகளில் உங்களுடைய புதிய திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து வெற்றி காண்பீர்கள். பிரச்னைக்குரிய காலங்களில் நிதானமான அணுகுமுறை நற்பெயரோடு வெற்றியையும் பெற்றுத் தரும். 2021ன் மத்தியில் நீங்கள் நெடுநாட்களாக மனதில் எண்ணியிருந்த முக்கியமான காரியம் ஒன்று நடைபெறக் காண்பீர்கள். வண்டி, வாகனங்களை இயக்கும்போதும் சாலை வழிப் போக்குவரத்தில் பயணிக்கும்போதும் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
நிதி : பொருளாதார நிலையில் சீரான முன்னேற்றம் கண்டு வருவீர்கள். ஆறாம் இடத்துச் சனி பகவான் கடன் பிரச்னைகளைக் கட்டுக்குள் கொண்டு வருவார். அரசுத் தரப்பிலிருந்து எதிர்பார்த்துக் காத்திருந்த உதவி கிட்டும். ஷேர்மார்க்கெட், ம்யூச்சுவல் ஃபண்டு போன்றவை லாபம் தரும். சேமிப்பு உயர்வடையும். பிள்ளைகளின் எதிர்கால நன்மை கருதி அவர்களின் பெயரில் புதிய சொத்து ஒன்றில் முதலீடு செய்ய முற்படுவீர்கள்.
குடும்பம் : குடும்பத்தில் உங்கள் வார்த்தைகள் மிகுந்த முக்கியத்துவம் பெறும். முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க உங்கள் ஆலோசனைக்காக மற்றவர்கள் காத்திருப்பார்கள். உடன்பிறந்தோர் உதவிகரமாக செயல்படுவார்கள். எல்லோரையும் அரவணைத்துச் செல்வதில் உங்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். குரு&சனியின் இணைவு பெற்றிருக்கும் இந்த நேரத்தில் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கல்வி : நேர்முகத் தேர்வுகள், போட்டித்தேர்வுகள் ஆகியவற்றில் சனியின் அருளால் அசாத்தியமான வெற்றி காண்பீர்கள். மாணவர்கள் அதிகமாக உழைக்க வேண்டிய நேரம் இது. அவ்வப்போது உடலில் தோன்றும் அசதியைப் போக்கி அயராது உழைத்தால் மட்டுமே எதிர்பார்க்கும் வெற்றியை அடைய முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இன்ஜினியரிங் மற்றும் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் அதிக உழைப்பினை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். வணிகவியல், புள்ளியியல், எகனாமிக்ஸ், அக்கவுண்டன்சி பிரிவுகளைச் சார்ந்த மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள்.
பெண்கள் : குடும்பத்தினை ஆனந்தமான சூழலில் நடத்தி வர மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வருவீர்கள். உங்களது படபடப்பான பேச்சுக்கள் மற்றவர் மத்தியில் உங்களுக்கென தனி இடத்தினை உருவாக்கித் தரும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் செல்வதில் முக்கியப் பங்காற்றி வருவீர்கள். சிறுசேமிப்பில் ஈடுபடுவது நன்மை தரும். கணவரின் பணிகளுக்கு உதவ வேண்டிய சூழல் உருவாகும்.
உடல்நிலை : சர்க்கரை வியாதிக்காரர்கள், உடலில் கொழுப்புசத்து மிக்கவர்கள் தங்கள் உடல்நிலையில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பிரதி மாதந்தோறும் மருத்துவ பரிசோதனைகளின் மூலம் உடல்நிலையைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளவும். 2021ம் ஆண்டில் ஏப்ரல், ஜூன், செப்டம்பர் மாதங்களில் உடலில் ஒரு சில அசௌகரியங்களை சந்திக்க நேரலாம். மற்றபடி ஆறாம் இடத்துச் சனி பகவான் எப்பேர்ப்பட்ட வியாதியிலிருந்தும் உங்களைக் காப்பார். உங்கள் உடல்நிலையைப் பொறுத்த வரை சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருந்துகளை நாடுவது நன்மை தரும்.
தொழில் : அரசாங்க உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வு கிட்டும். தொழில் முறையில் வெளிநாட்டு தொடர்பு உடையவர்கள், டிராவல்ஸ் நடத்துபவர்கள், பழைய பொருட்களை வாங்கி விற்பவர்கள் ஆகியோர் நன்மை காண்பார்கள். கட்டிடக்கலை, அழகுக்கலை, சமையல் கலை ஆகியவை சார்ந்தோர் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். உணவுப் பண்ட வியாபாரம் செழிக்கும். விவசாயிகள் தாங்கள் இதுநாள் வரை கடைபிடித்து வந்த பாரம்பரிய முறைகளை மாற்றிக்கொண்டு நவீனமான வழியில் பயிரிட்டு நல்ல லாபம் காண்பார்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவோடு புதிய பதவிகளை அலங்கரிப்பர். சனியின் பலம் பெருகுவதால் உழைப்பவர்கள் நிச்சயம் உயர்வு காண்பார்கள். பரிகாரம் : அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வரவும். வயதான தம்பதியருக்கு பாதபூஜை செய்து வணங்குவதும் நன்மை தரும்.
உத்திரம் 1ம் பாதம் : பொது : ராசிநாதனும் மற்றும் நட்சத்திர அதிபதியும் ஆகிய சூரியனின் தாக்கம் உங்களைக் கொள்கைப் பிடிப்பாளராகக் காண்பிக்கும். நினைத்த செயலை செய்து முடிக்கும் வரை ஓயமாட்டீர்கள். ஆறாம் பாவம் வலுப்பெறுவதால் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வீண் வம்பு வழக்கு விவகாரங்கள் வந்து சேரும். மனதினில் தத்துவார்த்த சிந்தனைகள் அதிகம் இடம்பெறும். ஒவ்வொரு விஷயத்திலும் ‘ஏன், எதற்கு, எப்படி’ என்ற கேள்விகள் மனதை வியாபிக்கும். தத்துவவாதிகளின் புத்தகங்களைப் படிப்பதில் தனி ஆர்வம் உண்டாகும். உங்களுடைய வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளே உங்களுக்கு எதிரியாக மாறக்கூடும் என்பதால் கவனத்துடன் பேசுவது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் சிறிதும் சம்பந்தமில்லாத விஷயத்தில் நீங்கள் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படும் வாய்ப்பும் உள்ளது.
நிதி : பொருளாதார நிலைமை நல்ல நிலையில் இருந்து வரும். அடுத்தவர்களுக்காக பொறுப்பினை ஏற்றுக் கொள்வதையும், தனது பொருளை அடமானம் வைத்து அவர்கள் பட்ட கடனை அடைப்பதையும் முடிந்த வரை தவிர்க்கவும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் பொருளிழப்பு உண்டாவதை தவிர்க்க முடியாது. 2021ம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு வீடு, வண்டி, வாகனங்கள் போன்றவற்றில் மாற்றங்களைச் செய்வீர்கள்.
குடும்பம் : குடும்பப் பொறுப்புகளை இழுத்துப்போட்டுக் கொண்டு செய்வீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்வுகளுக்காக திட்டமிடுவீர்கள், ஏப்ரல், மே மாதங்களில் குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உடன்பிறந்தோருக்கு உதவுவதில் மிகுந்த அக்கறை காட்டுவீர்கள். அவரிடமிருந்து பரஸ்பர உதவி இல்லாவிடினும் மிகுந்த ஈடுபாட்டுடன் உங்களால் இயன்றதை அவருக்குச் செய்வீர்கள். பிள்ளைகளின் செயல்களில் வேகத்தினைக் காண்பீர்கள். அவர்களை நிதானித்துச் செயல்படும்படி அவ்வப்போது அறிவுரை சொல்ல வேண்டியது அவசியம்.
கல்வி : மாணவர்கள் முன்னேற்றத்தினைக் காண கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களுடைய அசாத்தியமான ஞாபக சக்தி உங்களுக்கு துணை நிற்கும். ஆயினும் கூடுதலாக எழுத்துப் பயிற்சியில் ஈடுபட்டு வேகமாக எழுதும் கலையையும் வளர்த்துக் கொண்டீர்களேயானால் சிறப்பானதொரு வெற்றி நிச்சயம். தாவரவியல், விவசாயம், புவியியல், கட்டிடக்கலை சார்ந்த படிப்புகளைப் படித்து வரும் மாணவர்கள் அபரிமிதமான வளர்ச்சியைக் காண்பீர்கள்.
பெண்கள் : குடும்பத்தில் பிரச்னைக்கு உரிய நேரம் வரும்போது அமைதி காக்க வேண்டியது அவசியம். இதுநாள் வரை எதிரிகளாக இருந்து வந்த உறவினர்கள் பகைமை மறந்து மீண்டும் நல்லுறவு கொள்வார்கள். கணவரின் சிக்கன நடவடிக்கைகள் உங்களை மன வருத்தத்திற்கு உள்ளாக்கும். பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் இடையே பிரச்னைகள் உண்டாவதற்கான வாய்ப்பு உண்டு.
உடல்நிலை : உங்கள் நட்சத்திரம் சார்ந்தர்களில் சர்க்கரை வியாதிக்கா£ரர்களின் எண்ணிக்கை இந்த நேரத்தில் அதிகமாகும். சிறுசிறு விஷயங்களுக்குக் கூட மிகவும் டென்ஷன் ஆகி விடுகிறீர்கள். அளவுக்கதிகமாக எந்த ஒரு விஷயத்தையும் பற்றி குழப்பிக் கொள்ளாமல் அமைதி காப்பது உடல்நலத்திற்கு நல்லது. ஹைபர் டென்ஷன் போன்றவற்றால் உடல்நிலை பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. பெண்கள் மாதவிடாய் சார்ந்த பிரச்னைகளால் அதிகம் அவதிப்படுவார்கள். உடல்நலத்தில் தோன்றும் சிறு உபாதைகளுக்குக் கூட உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
தொழில் : உழைப்பதற்கு ஏற்ற பலன் இல்லையே என்ற வருத்தம் காணாமல் போகும். 2021ம் ஆண்டின் ஏப்ரல் மே மாதத்தில் ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்விற்கான வாய்ப்பும். எதிர்பார்த்துக் காத்திருந்த இடமாற்றத்திற்கான வாய்ப்பும் உண்டு. ஆயினும் ஜூன் மாதத்திலிருந்து இன்னமும் கூடுதல் பொறுப்புகளை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் உங்களுக்குக் கீழ் பணிபுரிவோர் உங்களை ரோல்மாடலாகக் கொண்டு செயல்படுவார்கள். உணவுப் பண்டங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல தனலாபத்தினைக் காண்பார்கள். கட்டுமானப் பொருட்களின் வியாபாரிகள் தொழிலில் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம். தொழில்முறையில் இதுநாள் வரை போட்டியாளராக இருந்து வந்த நபர் உங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் பங்குதாரராக சேர்ந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு.
பரிகாரம் : ஞாயிறு தோறும் அருகிலுள்ள சிவாலயத்தின் பிரகாரத்தை நான்கு முறை பிரதக்ஷிணம் செய்து வழிபட்டு வாருங்கள். அருணாச்சலேஸ்வரர் வழிபாடு நன்மை தரும்.
மேலும்
சனிப்பெயர்ச்சி பலன்! (20.12.2023 முதல் 6.3.2026 வரை) »