மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒருநாள் ஆகும். இந்த ஒருநாளின் வைகறைப் பொழுதாக மார்கழி அமைகிறது. உடல் சுறுசுறுப்பும், உள்ளத் தெளிவும் நிறைந்த வைகறைக் காலை வழிபாடு எப்போதும் சிறந்தது. எனவே வைகறைப் பொழுதான மார்கழி, தேவர்களை வழிபடுவதற்கு மிகப்பொருத்தமான மாதம் என்பது இந்த மாதத்தின் சிறப்பு. ஸ்ரீகிருஷ்ண பகவான் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பகவத்கீதையில் அருளினார். காலம் ஒரு கடவுள். காலமாக இருப்பவனும் கடவுள். இவர்களுக்கு இன்னது, இப்போது நடக்கும் என்று காலங்களை நிர்ணயித்து விதிப்பவனும் கடவுள். எல்லாக் காலங்களாகவும் விளங்குகின்ற ஸ்ரீகிருஷ்ணன், மாதங்களில் நான் மார்கழி என்றார். இவரது திருவாய் மொழி, மார்கழியின் சிறப்புகளை உயர்த்திப் பேசுகின்ற திருவாசகமாக அமைந்து விட்டது இந்த மாதத்தின் மற்றொரு சிறப்பு.