பதிவு செய்த நாள்
22
டிச
2020
11:12
ராசிபுரம்: ராசிபுரம் பொன்வரதாஜ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியில் பக்தர்களுக்கு வழங்க, 50 ஆயிரம் லட்டு தயார் செய்யும் பணி தொடங்கியது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், மேட்டுத்தெருவில் வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீதேவி, பூதேவி சமேத பொன் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியில் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இந்த ஆண்டு சொர்க்க வாசல் திறக்கும் நிகழ்ச்சி, வரும், 25 காலை, 5:00 மணிக்கு நடக்கவுள்ளது. இதையொட்டி, ராசிபுரம் ஜனகல்யாண் அமைப்பினர் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்க தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 1,000 கிலோ கடலை மாவு, 1,000 கிலோ சர்க்கரை, 50 கிலோ நெய், 1,000 கிலோ கடலை எண்ணெய், 50 கிலோ முந்திரி, ஏலக்காய், 25 கிலோ திராட்சை ஆகியவற்றை கொண்டு, 50 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி தொடங்கியது. 50 தொழிலாளர்களும் நேற்றுடன், 10 ஆயிரம் லட்டுகளை தயாரித்துள்ளனர். ஏற்பாடுகளை, ஜன கல்யாண் அமைப்பு தலைவர் பரந்தாமன், செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதேபோல், ஆர். புதுப்பாளையம் கரியபெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு வழங்க 10 ஆயிரம் லட்டுகள்; பட்டணம் கரிய பெருமாள் கோவிலில், 7,000 லட்டுகளை தயாரித்துள்ளனர்.