பல்லடம்:கோவில் திருப்பணிக்கு கோர்ட் இடைக்கால தடை விதித்தது, பல்லடத்தில் பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில், கோவில்களில் திருப்பணி செய்வதற்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. பல்லடத்தில், பழமையான கோவில்கள் கும்பாபிஷேகத்துக்காக காத்திருக்கும் நிலையில், ஐகோர்ட் உத்தரவு பக்தர்களிடையே கவலையை அளித்துள்ளது.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:பல்லடத்தில் ஸ்ரீமாகாளியம்மன், பொங்காளியம்மன், ஸ்ரீபாலதண்டாயுதபாணி, அருளானந்த ஈஸ்வரர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் உள்ளன. அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில்கள், பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாமல் உள்ளன. ஆகம விதிகளின்படி, 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும்.அறநிலையத்துறையின் மெத்தனம் காரணமாக பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாததால், பழமையான கோவில்கள் சிதிலமடைந்து, புராதன தன்மையை இழந்து வருகின்றன. நீண்ட காலத்துக்கு பின் கோவில்கள் புனரமைக்க திட்டமிடப்பட்டது.அதன்படி, முதல் கட்டமாக கடைவீதி ஸ்ரீமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறக்கட்டளை குழுவும் அமைக்கப்பட்டன. பாலாலய கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், ஐகோர்ட் கோவில்களில் திருப்பணி மேற்கொள்ள தடை விதித்தது.மாகாளியம்மன் கோவிலை தொடர்ந்து இதர கோவில்களிலும் திருப்பணி நடத்த தீர்மானித்திருந்தோம். ஐகோர்ட் உத்தரவால், திருப்பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறநிலையத்துறையினர், கோர்ட்டில் விளக்கம் அளித்து, கோவில் திருப்பணிக்கு அனுமதி பெற வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.