பதிவு செய்த நாள்
23
டிச
2020
04:12
சென்னை:கிராமக்கோவில் பூசாரிகள் ஓய்வூதியத்தை, 1,000 ரூபாயில் இருந்து, 3,000 ரூபாயாக உயர்த்தியும், ஓய்வூதியம் பெறுவதற்கான, வருமான உச்சவரம்பை, 24 ஆயிரம் ரூபாயில் இருந்து, 72 ஆயிரம் ரூபாயாக அதிகரித்தும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களில், 20 ஆண்டுகள் பணிபுரிந்து, 60 வயதை கடந்து, ஓய்வு பெற்ற கிராம கோவில் பூசாரிகளின் ஓய்வூதியம், 1,000 ரூபாயில் இருந்து, 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். ஓய்வூதியம் பெறுவதற்கான, ஆண்டு வருமான உச்சவரம்பு, 24 ஆயிரம் ரூபாயில் இருந்து, 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என, மார்ச், 24ல், சட்டசபையில், முதல்வர் பழனிசாமி., அறிவித்தார். தற்போது, கிராம கோவில் பூசாரிகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 1,931 பேர் பயனடைந்து வருகின்றனர். ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க, கூடுதல் செலவினம், 4.64 கோடி ரூபாயை, அரசு நிதியில் இருந்து ஒதுக்க வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனர், அரசுக்கு கருத்துரு அனுப்பினார்.
அதை பரிசீலனை செய்த அரசு, ஓய்வூதிய திட்டத்தின் கீழ், பயனாளிகள் எண்ணிக்கை, 4,000க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கவும், வருமான உச்ச வரம்பை அதிகரிக்கவும் அனுமதி அளித்துள்ளது.இதற்கான செலவாக, நடப்பு நிதியாண்டில், நான்கு மாதங்களுக்கு, 3.13 கோடி ரூபாய் ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.