ஒருமுறை இசை ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றார் முல்லா. ‘‘ஐயா... தங்களிடம் இசை கற்க ஆசைப்படுகிறேன். கற்றுக் கொடுப்பீர்களா?’’ எனக் கேட்டார். ‘‘அது தானே என் தொழில். நிச்சயம் கற்றுக் கொடுக்கிறேன்’’ என்றார். ‘‘மாதத்திற்கு என்ன கட்டணம் செலுத்த வேண்டும்?’’ எனக் கேட்டார் முல்லா. ‘‘முதல் மாதம் 100 பொற்காசுகள் தர வேண்டும் அடுத்த மாதம் 90 பொற்காசுகள். இப்படி மாதம் தோறும் 10 பொற்காசுகள் குறைந்து கொண்டே போகும்’’ என்றார். ‘‘சரி வருகிறேன்’’ என புறப்பட்டார் முல்லா. ‘‘ஏன் புறப்பட்டு விட்டீர்கள்? இசை கற்கவில்லையா?’’ என்றார் ஆசிரியர். ‘‘பத்து மாதம் கழித்து வரலாம் என நினைக்கிறேன். ஏனென்றால் அப்போது நீங்கள் இலவசமாகவே கற்றுக் கொடுப்பீர்கள் அல்லவா’’ என சிரித்தார் முல்லா. ஆச்சர்யத்தில் ஆழ்ந்தார் ஆசிரியர்.