குரூர குணம் கொண்டவரைக் கூட அன்பான பார்வையால் நல்லவராக மாற்ற முடியும். பார்வையில் அன்பு வெளிப்பட வேண்டுமானால் நம் மனதில் அமைதி தவழ வேண்டும். அதற்கு மனதில் எப்போதும் நல்ல சிந்தனை இருக்க வேண்டும். பிறர் தங்களிடம் பேசினாலும், பேசாவிட்டாலும் ஒருவரை கண்டதும் புன்னகையுடன் வரவேற்க வேண்டும். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர்களுக்கு நட்பு வட்டம் விரியும். பிறரிடம் புன்முறுவல் காட்டுவது சிறந்த தர்மம் என்கிறார் நாயகம். ஒருமுறை அபூஜஹீல் என்ற கொடியவன் நாயகத்தைக் கண்டதும், ‘‘உங்கள் முகம் அவலட்சணமாய் இருக்கிறது’’ என விமர்சித்தான். ‘‘ஆம்’’ என பதிலளித்த விட்டு புன்முறுவல் செய்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த தோழர் அபூபக்கர், ‘‘தங்களின் முகம் நிலவு போல் பிரகாசிக்கிறது’’ என்று சொல்லி மகிழ்ந்தார். அதற்கும் ‘‘ஆம்’’ என்று சொல்லி புன்முறுவல் பூத்தார். இதைக் கண்ட மற்றவர்கள், ‘‘இரண்டு பேருக்கும் இனிய முகம் காட்டினீர்களே! ஏன்?’’ என நாயகத்திடம் கேட்டனர். ‘‘நான் கண்ணாடி போலாவேன். அபூஜஹீல் அவனுடைய முகத்தை என்னில் பார்த்தான். அது அவலட்சணமாக இருந்தது. அபூபக்கர் அவரது முகத்தை என்னில் பார்த்தார். அது நிலவு போல பிரகாசித்தது. எனவே இருவரிடமும் ‘ஆம்’ என்று சொல்லி புன்முறுவல் காட்டினேன்’’ என விளக்கினார்.