சபரிமலை:ஆரன்முளாவில் இருந்து புறப்பட்ட தங்க அங்கி சபரிமலை வந்தது. இன்று மண்டலபூஜை நடைபெறுகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையால் கார்த்திகை ஒன்றாம் தேதி தொடங்கிய மண்டல காலம் நிறைவு கட்டத்தை அடைந்துள்ளது. 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜையின் நிறைவு மண்டலபூஜை. இதற்காக டிச.,22ல் ஆரன்முளாவில் இருந்து புறப்பட்ட தங்க அங்கி நேற்று மதியம் பம்பைக்கு வந்தது.மாலை 6:20 மணிக்கு சன்னிதானம் வந்தது. தந்திரி கண்டரரு ராஜீவரரு அங்கி பெட்டகம் வாங்கினார். நடை அடைத்து அதை ஐயப்பன் விக்ரகத்தில் அணிவித்து நடை திறந்து தீபாராதனை நடத்தினார்.
இன்று காலை 11:40 முதல் மதியம் 12:20 மணிக்குள் மண்டலபூஜை நடைபெறுகிறது. பிரம்மகலசத்தில் சந்தனம் பூஜிக்கப்பட்டு பவனியாக எடுத்து வந்து ஐயப்பன் விக்ரகத்தில் அபிேஷகம் செய்த பின் தங்க அங்கி அணிவித்து மண்டலபூஜை நடைபெறும்.இன்று இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிச.,30ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். ஜன., 14ம் தேதி மகரவிளக்கு விழா நடைபெறுகிறது.