பதிவு செய்த நாள்
26
டிச
2020
11:12
திருப்பதி: திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று தங்க தேரில், ஸ்ரீதேவி பூதேவி சமேதராய், மலையப்ப ஸ்வாமி வலம் வந்தார்.
சொர்க்க வாசல் வழியாக செல்ல, பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப் பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. காலை, 4:30 முதல், தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப் பட்டனர். தரிசனம் முடித்த பக்தர்கள் வரிசையாக சொர்க்க வாசல் வழியாக செல்ல அனுமதிக்கப் பட்டனர். ஆன்லைன் வாயிலாக டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
முக்கிய பிரமுகர்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான, எஸ்.ஏ.பாப்டே, நகரி எம்.எல்.ஏ., ரோஜா உட்பட பல முக்கிய பிரமுகர்கள், ஏழுமலையான் சேவையில் பங்கேற்ற பின், சொர்க்க வாசல் வழியாக சென்று வந்தனர். திருமலையில் இந்தாண்டு, 10 நாட்களுக்கு சொர்க்க வாசலை திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதால், பக்தர்கள் பலர், சொர்க்க வாசல் வழியாக செல்ல மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, காலை, 9:00 - 11:00 மணி வரை, தங்கதேரில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மலையப்ப ஸ்வாமி வலம் வந்தார். மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய தங்கத் தேரை, பெண்கள் வடம் பிடித்து இழுத்து துவங்கி வைத்தனர். பல மாதங்களுக்கு பின், மாடவீதியில் தங்கத் தேர் புறப்பாட்டை பார்த்த பக்தர்கள், கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினர். ஏழுமலையான் கோவிலில் முன்வாசல், கொடிமரம், பலிபீடம், ரங்கநாயகர் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் மலர்கள், பழங்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.
நன்கொடை: தமிழகத்தின் உளூந்துார்பேட்டை தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான குமரகுரு, வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, ஏழுமலையான் சேவையில் பங்கேற்றார். இதன்பின், தன் தொகுதியான உளூந்துார்பேட்டையில் ஏழுமலையான் கோவில் கட்ட , ஒரு கோடி ரூபாயை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.