பதிவு செய்த நாள்
26
டிச
2020
04:12
சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் கட்டுப்பாட்டுகளுடன், தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா எளிமையான முறையில், கொண்டாடப்பட்டது.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் வகையில், உலகெங்கிலும் கிறிஸ்துமஸ் விழா டிச., 25ல் கொண்டாடப்படுகிறது. இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்ளும் நாளே கிறிஸ்துமஸ் விழா.ஒவ்வொருவரும் தன்னிடம் உள்ளதை பகிர்ந்து கொண்டு, கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக கொண்டாடினால், கிறிஸ்து நம்மில் இருப்பார் என்பது நம்பிக்கை. நம்முடைய நேரத்தை பிறருக்காக செலவு செய்ய வேண்டும். எதிரிகளை மன்னித்து, அவர்களை நேசித்தால், அதுவே சிறந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என, கருதப்படுகிறது. அத்தகைய சிறப்பு பெற்ற கிறிஸ்துமஸ் விழா, சென்னை, புறநகரில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாட்டுடன் நடந்தது.
சாந்தோம் தேவாலயம்: சென்னை, சாந்தோம் புனித தோமையார் அகில உலக திருத்தலப் பேராலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், குறைந்த அளவு பக்தர்களுடன் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், அங்கு, டோக்கன் முறை அறிமுகப் படுத்தப்பட்டு, கட்டுப்பாடு விதிமுறைகளை கடைப்பிடித்து, குறைந்தளவு பக்தர்களுடன் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அனுமதி கிடைக்காதவர்கள் சாந்தோம் சாலையில் நின்று, சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர்.
பெசன்ட்நகர் ஆலயம்: பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில்,கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர். குடும்பத்துடன் பங்கேற்ற தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டிய ராஜன் கூறியதாவது: வர உள்ள புத்தாண்டில், சிறந்த சிந்தனைகள், அச்சமற்ற உணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்.அதனை வலியுறுத்தும் வகையிலும், அதேநேரம் அரசின் கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு விதிமுறைகளான சமூக இடைவெளி, முக கவசம், சுத்தமாக சுகாதாரமாக இருப்பது குறித்தும், சிறப்பு வழிபாட்டில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது ஒரு, சுகமான அனுபவமாக இருந்தது.இவ்வாறு, அவர் கூறினார். அதேபோல, செயின்ட் தாமஸ் மவுன்ட் பேராலயம், சின்னமலை சர்ச், சென்னை உள்ளிட்ட தேவாலயங்களில்கிறிஸ்துமஸ் விழா சிறப்பு பிரார்த்தனையுடன் நடந்தது.