பதிவு செய்த நாள்
26
டிச
2020
04:12
சேலம்:அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவிலுக்கு, மக்கள் தாராளமாக உதவி செய்து, தங்கள் பங்களிப்பை வழங்கலாம், என, விஷ்வ ஹிந்து பரிஷத், அகில உலக பொதுச்செயலர் மிலிந்த் பராண்டே கோரிக்கை விடுத்துள்ளார்.
சேலம், மரவனேரியில், விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கூட்டம், நேற்று நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேஜாராம் தலைமை வகித்தார். அதில் பங்கேற்ற, அகில உலக பொதுச் செயலர் மிலிந்த் பராண்டே, மாநில அமைப்பு செயலர் ராமன் நிருபர்களிடம் கூறியதாவது:
அயோத்தி ராம ஜென்ம பூமியில் கோவில் கட்ட ஏற்பாடு செய்யும்படி, மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ராமஜென்ம பூமி தீர்த்த ேஷத்ரா, நடப்பாண்டு பிப்ரவரியில் அமைக்கப்பட்டது. இப்பணியில், நாடு முழுதும் உள்ள பக்தர்கள், தங்கள் பங்களிப்பை நல்க, ராம ஜென்ம பூமி தீர்த்த ேஷத்ரா, விஸ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்கிறது.வரும் ஜன., 15 முதல், பிப்., 27 வரை, மக்கள் தொடர்பு நிகழ்ச்சிக்கு, விஸ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்துள்ளது.
கோவில் கட்டுமானப்பணிக்கு, பக்தர்களின் பங்களிப்பு பெறப்படும். இதன் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த, 10, 100, 1,000 ரூபாய் மதிப்பில், கூப்பன், ரசீதுகள், தன்னார்வலர்களிடம் இருக்கும்.இத்திட்டம் மூலம், 4 லட்சம் கிராமங்களில், 11 கோடி குடும்பங்களை தொடர்பு கொண்டு, நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 10 ஆயிரம் ஊராட்சி, 5,000 வார்டுகள், மேலும், 50 லட்சம் குடும்பங்களை நேரடியாக தொடர்பு கொள்ள உள்ளோம். இப்பணியில், 90 ஆயிரம் தொண்டர்கள் ஈடுபடுவர். காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சேலம் ஆத்மானந்தா சரஸ்வதி, பேரூர் மருதாசல அடிகளார், இதர சைவ, வைணவ மடங்களின் பெரியோர், இந்த இயக்கத்தில் பங்கேற்க உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.