பதிவு செய்த நாள்
27
டிச
2020
10:12
விருதுநகர் : மாவட்டத்தில் ஐயப்பன் கோயில்கள் உட்பட பல்வேறு இடங்களில் மண்டல பூஜை நடந்தது.இதையொட்டி சுவாமிக்கு லட்சார்ச்சனை, சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
விருதுநகர் அருகே அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் ஐயப்ப சுவாமி மண்டல பூஜை அன்னதான விழா குழு சார்பில் மண்டல பூஜை நடந்தது . இதை முன்னிட்டு லட்சார்ச்சனை , பஜனை , சுவாமிக்கு அன்னாபிஷேகம், சொர்ணாபிஷேகம், தேன், சந்தனம், நெய் உட்பட பல்வேறு அபிஷேகங்கள், விசேஷ தீபாராதனை நடந்தது. ரத்த தான முகாமில் நுாற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். விருதுநகர் வாலசுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு லட்சார்ச்சனை நடந்தது. சுவாமி வெள்ளிப்பலி வாகனத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார். 21 வகை அபிஷேகங்களுடன் 108 சங்காபிஷேகமும் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிவகாசி ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஐயப்ப சேவா சங்கம் பக்தர்கள் குழு, மலையாள கருப்பசாமி கோயில் ஐயப்ப பக்தர்கள் குழு, தெய்வானை நகர் கமலவிநாயகர் கோயிலில் கமல விநாயகர் சேவா ஐயப்ப பக்தர்கள் குழு, வலம்புரி விநாயகர் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் குழு சார்பிலும் கோயில்களில் மண்டல பூஜை வழிபாடு, அன்னதானம் நடந்தது.
ராஜபாளையம் அறிவொளி நகரில் முத்துமாரியம்மன் கோயிலில் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், விசேஷ தீபாராதனை செய்யப்பட்டது. முதல்நாள் பூஜையில் ஐயப்ப சுவாமி மாடசுவாமி கோயிலை சுற்றி வீதி வலம் வந்தது. இரண்டாம் நாளில் சிறப்பு அலங்காரம், பஜனை, அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை முத்துமாரியம்மன் கோயில் ஐயப்பசுவாமி பக்தர்கள் குழு செய்தது. காரியாபட்டி ஐயப்ப பக்தர்கள் முக்குரோடு மாரியம்மன் கோயில், பஜார் அருகே உள்ள ஐயப்பன் கோயில் ஐயப்பசுவாமிக்கு லட்சார்ச்சனை, சிறப்பு வழிபாடு நடத்தி பஜனை செய்தனர்.