பதிவு செய்த நாள்
28
டிச
2020
09:12
ஆரணி: ஆரணி அருகே, யந்திர வடிவிலான சனீஸ்வரர் பகவான் கோவிலில் நடந்த, சனிப்பெயர்ச்சி விழாவில், ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ஏரிக்குப்பத்தில், சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இங்கு, ஆறடி உயரம், ஒன்றரை அடி அகலத்தில், சனீஸ்வரரின் உருவம், யந்திர வடிவில், கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில், சனீஸ்வர யந்திர பீஜாட்ச மந்திரம், மேல் இடதுபுறம் சூரியனும், வலதுபுறம் சந்திரனும், நடுவே, சனீஸ்வரரின் வாகனமான காகம் ஆகியவை பொறிக்கப்பட்டிருப்பது, ஆலயத்தின் தனிச்சிறப்பு. நேற்று அதிகாலை, 5:22 மணிக்கு தனசு ராசியிலிருந்து, மகர ராசிக்கு சனிப்பெயர்ச்சி நடந்தது. இதையொட்டி, அதிகாலையில் யந்திர வடிவிலான சனீஸ்வர சிலைக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். கொரோனாவால், பக்தர்கள் வர தடை உள்ளதால், குறைந்த அளவிலான, உள்ளூர் பக்தர்கள் மட்டும் நேற்று கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும், கோவில் குளத்தில் நீராடவும், கோவில் வெளிப்புறம் மற்றும் உட்புற பகுதியில், தீபம் ஏற்றவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.