பதிவு செய்த நாள்
28
டிச
2020
09:12
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழாவில், பிற மாவட்ட பக்தர்களையும் நிபந்தனையுடன் அனுமதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விஷ்ணுதாஸ் என்பவர் தாக்கல் செய்த மனு:சிதம்பரம் நடராஜர் கோவிலில், இன்று முதல், 31ம் தேதி வரை, மார்கழி ஆருத்ரா தரிசன மகோற்சவம் நடக்கிறது. இதில், பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவை ரத்து செய்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பக்தர்கள் எங்கிருந்து வந்தாலும், சுவாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அனிதா சுமந்த் அமர்வு உத்தரவு: மாநிலங்களுக்கு இடையிலும், மாவட்டங்களுக்கு இடையிலும், மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகளை, மத்திய அரசு தளர்த்தி உள்ளது.இந்நிலையில், அடிப்படை உரிமைகளில், காரணமின்றி கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது; அதில், யாரும் குறுக்கிடவும் முடியாது. இது, மத விவகாரங்களுக்கும் பொருந்தும்.மேலும், பொங்கல் திருநாளில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த எந்த தடையும் இல்லை. இந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்திருப்பது நியாயமற்றது. எனவே, சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்திற்கு, அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும். கடலுார் கலெக்டர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, மாலை, 3:00 முதல், 4:00 மணி; 4:30 முதல், 5.30 மணி; 6:00 முதல், இரவு 7:00 மணி வரை, தலா, 200 பக்தர்கள் வீதம், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்க வேண்டும்.கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும், முககவசம் அணிய வேண்டும்; கொரோனா பரிசோதனை சான்று கட்டாயமில்லை. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.