பதிவு செய்த நாள்
31
டிச
2020
12:12
ஊரடங்கால் பல மாதங்களாக முடங்கிய மக்கள், கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு, இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். எல்லா வகையிலும் நன்மை தரும் என்ற நம்பிக்கையோடு, 2021 ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை, மக்கள் எளிமையாக கொண்டாட்டத்துடன் வரவேற்கின்றனர். ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டின் போதும், சென்னை, மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை எல்லாம் களை கட்டும். நள்ளிரவில் வாகனங்கள் ஒளி, சப்தம் உமிழ்ந்தபடி சீறிப்பாயும். நடுரோட்டில், கேக் வெட்டி கொண்டாட்டம்; வாண வேடிக்கை நடக்கும். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள நலச்சங்கத்தினர் கலை நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்வர். ஆனால், இந்தாண்டு கொரோனா தொற்று பரவல் மக்களை பாடாய் படுத்தி விட்டது. பல மாதங்களாக முடங்கிய மக்கள், தற்போது தான், கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.
இறை வழிபாடு சிறப்பு: வரும் புத்தாண்டு, கொரோனா நீங்கிய ஆண்டாக அமையும்; எல்லா வகையிலும் நன்மை தரும் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது. பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், எளிமையாக வரவேற்க, மக்கள் ஒரு வாரமாகவே தயாராகினர்.சில நாட்களாக, பிராட்வே, மாம்பலம், மயிலாப்பூர், நங்கநல்லுார், தாம்பரம் உள்ளிட்ட வர்த்தக பகுதிகளில், மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்பட்டது.குறிப்பாக, காலண்டர், டைரி கடைகளில் வியாபாரம் சூடுபிடித்தது. ஏராளமான பேக்கரிகளில் கேக்குகளை மக்கள், ஆர்டர் செய்தனர். சிறிய பரிசுப் பொருட்கள் கடைகளிலும், கணிசமான கூட்டம் காணப்பட்டது.பலர் தங்களின் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ள, வாழ்த்து அட்டைகளும் வாங்கினர்.கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சில, ரிசார்ட்களிலும் இரவு, உற்சாக பானத்துடன், டின்னர், நள்ளிரவு கேக் வெட்டுதல் என, நண்பர்களுடன் மகிழும் வகையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான முன்பதிவுகள் நடந்தன.
சென்னை, புறநகரில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்துவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடுகள் நடந்தன. ஆங்கிலப் புத்தாண்டின் போதும், கோவில்களில் நள்ளிரவு நடை திறப்பு கிடையாது. ஆனால், காலையில் மக்கள் கோவில்களுக்கு சென்று இறைவழிபாடு நடத்துவது வழக்கம் என்பதால், பிரசித்தி பெற்ற கோவில்களில் முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. சென்னை, புறநகரில் உள்ள, கேட்டட் கம்யூனிட்டி வாசிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், நகர்களைச் சேர்ந்த நலச்சங்கத்தினர் புத்தாண்டை முன்னிட்டு, பல்வேறு போட்டிகளை அறிவித்து நடத்தினர். புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு ஆடல் பாடலுடன், கேக் வெட்டி கொண்டாட்டம் நடத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்: சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறியதாவது:கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், இந்த ஆண்டு பெரிய அளவில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லாவிட்டாலும், தங்கள் ஏரியாக்களில் எளிமையான முறையில் கொண்டாட, ஏற்பாடுகள் செய்துள்ளனர்.ஆனால், ஆங்கிலப் புத்தாண்டு என்பது தமிழருக்கு பெரிய விஷயம் இல்லை. சென்னை போன்ற நகரில் மேலை நாட்டு கலாசாரம் அதிகரித்து விட்டதால், ஆங்கில புத்தாண்டிற்கு, மவுசு அதிகரித்து விட்டது.தமிழர், தமிழ் என, ஓட்டுக்காக மட்டும் கூவிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சியினர் கூட, இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை.
ஆங்கிலப் புத்தாண்டு எளிமையாக கொண்டாடப்படுவதிலும், ஒரு நன்மை உண்டு; கொரோனா தொற்று மேலும் குறையும்; சில மாதங்களில், கொரோனா தொற்று நீங்கி, சுகாதார மேம்பாடு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால், வர உள்ள தமிழ் புத்தாண்டை, தமிழர்கள் அனைவரும், எப்போதும் இல்லாத வகையில், சிறப்பாக கொண்டாட வேண்டும். வரும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம், ஆண்டுதோறும் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.