பதிவு செய்த நாள்
01
ஜன
2021
04:01
ஆங்கில புத்தாண்டிற்கு வணக்கங்கள். ஒரு வழியாக 2020 கழிந்து போனது! ஒரு ஆண்டு முடிவதும் மறு ஆண்டு பிறப்பதும் வாடிக்கையான விஷயம் தான். அப்போது நாம் ஒருவருக்கொருவர் வாழ்த்திக் கொள்வதும் கூட வாடிக்கையான விஷயம் தான்!ஆனால் இந்த 2020 ஐயும் சரி, 2021 ஐயும் சரி நாம் அந்த வாடிக்கையில் சேர்க்க இயலாது. நாளும் கிழமையும் தனக்கென இல்லாத ஒரு பிச்சைக்காரன் கூட 2020 முடிஞ்சிச்சா.. 2021 வந்துடிச்சா.. இந்த வருஷமாச்சும் நல்லா இருக்கணும், நல்லா இருக்கும் தானே.. என்று கேட்கும் ஒரு நிலையில் தான் 2021 பிறந்துள்ளது.
2020 ம் இப்படித்தான் பிறந்தது. நாமும் வணங்கி தான் வரவேற்கிறோம். 2020ல் நாம் வல்லரசாகி நிமிர்ந்து எழுந்து நின்றிருப்போம் என்று அப்துல்கலாம் கனவு கண்டார். நம்மையும் காணத் துாண்டினார். அந்த வகையில் 2020 என்பது இந்திய நாட்டை பொறுத்த வரையில் ஒரு கனவுக் காலம்.ஆனால் இந்த கனவுக் காலம் மாபெரும் கசப்புக்காலமாகும் என்று ஒருவர் கூட கற்பனை செய்திருக்க மாட்டோம். இந்த கசப்பு நமக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த உலகுக்கே என்றானது தான் விந்தை.
இந்த கசப்பு 2021 பிறந்துவிட்ட நிலையிலும் நீங்கவில்லை, ஒரு புதுவித அச்சமுடன் தொடர்ந்தபடியே தான் இருக்கிறது.அந்த கசப்புக்கான இன்னொரு பெயர்தான் கொரோனா. இந்தப் பெயரிலான ஒரு முள்ளுருண்டைக் கிருமி ஒட்டுமொத்த உலகை ஒரு உதை பந்தாக்கி, தன்னையும் மாரடோனாவாக ஆக்கிக் கொண்டு துவம்சம் செய்து விட்டது.இதனால் பல நாடுகள் யானைக்கூட்டம் புகுந்த சோள வயல் போலாகி நாசமாகிக் கிடக்கின்றன.
இம்மட்டில் இந்த உலகின் நாட்டாமையான அமெரிக்கா, எங்கள் பேச்சைக் கேட்டுத்தான் சூரியனே விழித்தெழும் என்னும் பிரிட்டன், பெரும் இரும்புத்திரை மறைப்பு கொண்ட சீனா என்று ஒரு நாடுகூட தப்பவில்லை.
அனேக மாற்றங்கள்: அவ்வளவு பேரையும் வெச்சுச் செய்த இந்த கொரோனா நம்மை மட்டும் விட்டுவைக்குமா என்ன. நான்கு மாத காலத்திற்கு நம்மையெல்லாம் வீட்டுச்சிறைக்குள் போட்டு கை கட்டி வாய் பொத்தி நிற்க வைத்து விட்டது. சைக்கிளிலும், பைக்குகளிலும், கார்களிலும், ஏனைய போக்குவரத்துகளிலும் நிற்க நேரமின்றி திரிந்த கால்களில் எல்லாம் ஒரு மாய விலங்கு போடப்பட்டது.
ஓய்வே இன்றி ஓடிய வாகனங்களெல்லாம் நீண்ட ஓய்வைக் கண்டன. டயர்களில் காற்றுபோய் பேட்டரியும் டவுனாகி அவைகளும் இரும்புப் பிணங்களாயின். தார்ச்சாலைகளில் புல் முளைக்கத் தொடங்கியது. சப்தமும் புகையுமில்லாத வானத்தில் பறவைகள் கொட்ட மடிக்க தொடங்கின. நம்மாலும் நம் அழுக்காலும் கறுப்பான ஆறுகளெல்லாம் ஸ்படிகம் போலாயின.
புகையும் துாசும் இல்லாத புதியவானில் நட்சத்திரங்களை நம்மால் பளிச்சென பார்க்க முடிந்தது.அடிபட்டே சாகும் தெரு நாய்களுக்கெல்லாம் ஆயுள் கூடிப்போனது. இப்படி நல்லதும் கெட்டதுமாய் நம்மிடமும் அனேக மாற்றங்கள்.ஆனபோதிலும் உடல் ஆரோக்கியத்தில் நாம் தான் வல்லரசு என்பது போல கொரோனாவால் மற்ற நாடுகளை தாக்கியது போல நம்மை பெரிய அளவில் தாக்க அதனால் முடியவில்லை. பாதிப்பில் இருந்து மீண்டதிலும் நம்வேகம் மற்ற நாடுகளிடம் இல்லை. மரணங்களின் சராசரியும் மிக மிகக் குறைவே. அம்மட்டில் நாம் வல்லரசே!
இத்தனைக்கும் நம் தேசம் துாசும் துப்புமான தேசம். தெருவுக்கொரு பூங்காவோ, குப்பையே இல்லாத சாலைகளோ இங்கே கிடையவே கிடையாது. இவைகளையே தாங்கி விட்டதாலோ என்னவோ கொரோனாவையும் சந்தித்து அதிலிருந்து மீண்டும் வந்து கொண்டிருக்கிறோம். இனியும் வருவோம்.
உறவுகளின் அருமை
கொரோனா கொடியது தான் அது நம் பொருளாதாரத்தை ஒரு உலுக்கு உலுக்கி விட்டதுதான்! ஆன போதிலும் உயிரின் மதிப்பை அது நமக்கெல்லாம் பெரிதும் உணர்த்தியுள்ளது. உறவுகளின் அருமையையும் புரிய வைத்துள்ளது.பணத்தின் தேவை, சேமிப்பின் அவசியம், சிக்கனத்தின் சிறப்பு என்று பல அரிய பாடங்களை நடத்திய அது நட்பின் வலிமையையும் புரியச் செய்து குடும்ப உறவில் ஒரு வெளிச்சத்தையும் பாய்ச்சியுள்ளது.ஒட்டுமொத்த உடல்நலத்திலும் நம் கவனம் இதனால்தான் திரும்பியது.
இந்த நாட்களில் நம்மில் பலர் விரக்திவயப்பட்டு, பயத்தில் புதைந்த போதிலும், பல அன்பானவர்களை நாம் இழந்து விட்ட நிலையிலும் குறிப்பாக அன்றாடம் உழைத்தாலே உணவு எனும் நிலையில் இருப்போர் பெரிதும் பாதிக்கப்பட்டதெல்லாமும் கொரோனாவின் கொடுமைக்கு சான்றாகிப் போனது. இதனால் பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்தவர்கள் எல்லாமும் கூட பொருளாதாரம் குறித்து சிந்தித்து அதன் உட்கூறுகள் பற்றி சிந்திக்கும்படியாயிற்று. கூட்டிக்கழித்து வகுத்துப் பெருக்கி கணிதப்படுத்திப் பார்த்தால் கொரோனா இயற்கைக்கு பரிசையும் மனிதர்களுக்கு மட்டும் தண்டனையும் தந்து ஒரு பாடமும் நடத்தியிருக்கிறது. அந்த பாடம் முடியவில்லை. 2021 லும் அது தொடர்ந்து கொண்டுள்ளது.
முகமூடி மனிதர்கள்: இந்த புத்தாண்டில் நாம் கற்ற பாடப்படி இனியும் நாம் நடக்கத் தவறினால் அதன்பின் கடவுள் கூட நமக்கு கருணை காட்ட தயங்குவார்.என்னதான் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு நமக்கு அது கவசமாகும் என நாம் கருதினாலும் முகக்கவசத்தை நாம் கைவிடக் கூடாது. 2021 லும் நாம் முகமூடி மனிதர்களாக வாழ்வதே நமக்கு நலம் தரும்.
அதேபோல் கைகழுவும் பழக்கம், விலகி நின்று பேசிப் பழகும் முறை, காலம் தவறாது சத்துள்ள உணவுகளை உண்டு நம் எதிர்ப்புச் சக்தியை பலமாக வைத்திருத்தல் போன்றவையே இந்த 2021லும் நமக்கு துணை நின்றிடும். மற்றதெல்லாம் பிறகே...
இந்த 2021 இன்னொரு விதத்திலும் முக்கியத்துவம் பெறப்போகிறது. நம்மை ஆளுவோர்க்கான தேர்தல் வர உள்ளது. அந்த தேர்தலில் நாம் முதலில் 500க்கும் 1000த்துக்கும் விலை போகாதிருப்போம். சரியான பிரதிநிதிகளை தேர்வு செய்பவர்களாகவும் இருப்போம். மதமோ மொழியோ இங்கே இப்போது பிரச்னையில்லை. ஊழலில்லாத செயல்திறன் தான் இப்போதைய நம் முதல் தேவை. பிறப்புச் சான்றிதழில் இருந்து, மரணச்சான்று வரை சகலத்திற்கும் காசு கொடுத்தாலே காரியமாகும் என்கிற கேடு நீங்கிட வேண்டும். குண்டுகுழியில்லாத சாலைகளும், பசுமையான சோலைகளும் எங்கும் கூடிட வேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும், வாகன விதிகள் பின்பற்றப்பட வேண்டும். மழைநீர் ஒரு சொட்டு சேதமின்றி, சேமிக்கப்பட வேண்டும். பள்ளிகள் கல்லுாரிகள் திறக்கப்பட்டு அவை தேக்க நிலை கடந்து ஆக்க நிலைக்கு மிகவேகமாய் சென்றிட வேண்டும், சிறு குறு தொழில் முனைவோர் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.
இப்படி நுாறு டும் கள் சொல்ல இருக்கின்றன!அந்த நுாறில் ஒரு ஆறு இந்த 2021 ல் செயல் படுத்தப்பட்டாலும் போதும் நம் வல்லரசுக்கனவு இந்த ஆண்டில் நனவாகக் கூடும். கொரோனாவை விடக்கொடிய கிருமி நம் விழிப்பின்மைதான். விழிப்பேற்பட்டு விட்டாலோ கொரோனாவும் கூட நம்மால் அழிக்க முடிந்த துாசுதான்!துாசாகட்டும் கொரோனா.. பாஸாகட்டும் நம் நல் விருப்பங்கள். புத்தாண்டே கை கொடு... நாங்கள் கடந்த ஆண்டில் இழந்து விட்டவைகளையும் திருப்பிக்கொடு. அழித்தது 20, ஆக்கியது 21 என்று உன்னை உலகம் போற்றட்டும்.
-இந்திரா செளந்தர்ராஜன்
எழுத்தாளர்