பதிவு செய்த நாள்
31
மே
2012
11:05
மோகனூர்: செவந்தாம்பாளையம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். மோகனூர் அடுத்த அரசநத்தம் பஞ்சாயத்து, செவந்தாம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, சில நாட்களுக்கு முன் துவங்கியது. தினமும் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. கடந்த 28ம் தேதி, அம்மன், தேரில் எழுந்தருளி, செவந்தாம்பாளையம், அரசநத்தம், மல்லம்பாளையம், பனங்காட்டூர், நடுப்பட்டி, சந்தரகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் காலை பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும், பக்தர்கள் அம்மனுக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். நேற்று காலை 10 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. அதை தொடர்ந்து, கம்பம் பிடிங்கி கிணற்றில் விடும் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்திருந்தனர்.