Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி விசாக விரதமுறை! முருகப்பெருமானின் திருநாமங்கள்! முருகப்பெருமானின் திருநாமங்கள்!
முதல் பக்கம் » வைகாசி விசாகம்
முருகப்பெருமான் அருள்பாலிக்கும் தலங்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 மே
2012
05:05

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் திருக்கோயிலில் ஒரு தனிச் சிறப்பு உள்ளது. கொடிமரத்திலிருந்து வலமாக எல்லாச் சன்னதிகளுக்கும் நாம் சென்று வந்தால் ஓம் என்ற எழுத்து வடிவில் அப்பாதை அமைந்துள்ளதைக் காணலாம். திருச்செந்தூரில் தரப்படும் பன்னீர் இலை விபூதியும் அனைத்து நோய்களையும் அகற்றும் திறன் கொண்டது ஆதிசங்கரரின் வயிற்று நோயைக் குணப்படுத்தியது இந்த பன்னீர் இலை விபூதிதான். பன்னீர் இலையில் 12 நரம்புகள் இருக்கும். இது ஆறுமுகனின் பன்னிரு கரங்களைக் குறிக்கும். இந்த விபூதியை இட்டுக் கொணடால் முருகனே பன்னிரு கரங்களால் நம் உடலை வருடி வியாதியை குணப்படுத்துகிறார் என்பது ஐதீகம். இக்கோயிலுக்கென்று தங்கக் குடங்கள் இருக்கின்றன. வேள்வி மற்றும் குடமுழுக்கு நாட்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. தங்கத் தேங்காய்களும் இங்கு உண்டு. இவை முக்கியப் பிரமுகர்கள் வருகை, பூரண கும்ப மரியாதை மற்றும் வேள்வியின் போது பயன்படுத்தப்படுகின்றது. விசாகம் குருவிற்குரிய நட்சத்திரமாதலால் திருச்செந்தூரில் வைகாசி விசாக விழா 10 நாட்கள் நடைபெறுகிறது.

வைகாசி விசாகத்தன்று திருத்தணியில் வழங்கப்படும் விபூதி, பாதரேணு என்ற சந்தனமும் நோய்களைத் தீர்க்கும் வல்லமை கொண்டது.

வைகாசி விசாகம் மட்டுமல்லாமல், சித்திரை மாதப் பிற்பகுதியும் வைகாசி மாத முற்பகுதியும் இணைந்த அக்னி நட்சத்திர காலமாகிய 15 நாட்களுக்கு பழனி மலையை பக்தர்கள் இரவு பகலாக கிரிவலம் செய்வர். கடைசி நாளன்று முத்துக்குமார சுவாமி மலையடிவாரம் வந்து பவனி வருவார். பூக்கட்டி மண்டபம் அருகே தீர்த்தம் வழங்கி இரவு கிரிப்பிரகார திருவுலா சென்று வருவார். இது ஆண்டுதோறும் நடக்கும் சிறப்பு விழாவாகும்.

ஈரோடு வெண்ணெய் மலையில் அருள்புரியும் முருகப்பெருமான் தனது கரங்களில் எந்தவித ஆயுதங்களும் இல்லாமல் தனித்த திருக்கோலத்தில் தண்டாயுதபாணியாக காட்சித் தருகிறார். வள்ளி-தெய்வானை மற்றும் மயில் வாகனமும் இவருக்கு அருகில் இல்லை. முன்னொரு காலத்தில் இங்குள்ள மலை வெண்ணெயாக இருந்ததாம். காலப்போக்கில் வெண்ணெய் இறுகி, வெண்ணிற மலையாக மாறிவிட்டதாகச் சொல்கிறார்கள். இந்த மலையை வலம் வந்தால், கயிலாய மலையை வலம் வந்த பலன் கிட்டும் என்பது ஐதீகம்.

புதுக்கோட்டை அருகே உள்ளது. திருவேங்கைவாசல், இங்குள்ள ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் கோயில் பிராகாரத்தை வலம் வரும்போது, தவம்செய்யும் திருக்கோலத்தில் உள்ள முருகப்பெருமானை தரிசிக்கலாம். இவரை வழிபட்டால் எளிதில் தியானம் கைகூடும் என்கிறார்கள்.

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் மூலவர் சன்னிதியை ஒட்டி ஒரு குகை அமைந்துள்ளது. அங்கு ஒரே பீடத்தில் அமைந்த 5 லிங்கங்களை தரிசிக்கலாம். இந்த லிங்கங்களை முருகப்பெருமான் பூஜிப்பதாக ஐதீகம். அதனால் மானிட பூஜை கிடையாது மேலும், இந்தக் குகையின் மேல்புறத்தில் ஒரு சிறிய இடைவெளி உள்ளது. இதன் வழியாக தேவர்கள் தினமும் இங்கு வந்து 5 லிங்கங்களையும் பூஜிப்பதாகச் சொல்கிறார்கள்.

ஈரோடு சீனாபுரம் என்னுமிடத்தில் 60 அடி உயரக் குன்றின் மேல் 60 படிகள் தாண்டிச் சென்றால் முருகன் மேற்கு நோக்கி அருள்கின்றார். இங்கு வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  கொங்கு மண்டலத்தில் 6 மலைகளிலும் 6 கோயில்களில் ஆறுமுகன் அருள்புரிவதால் இதை கொங்கு மண்டல அறுபடை வீடுகள் என்பர். வைகாசி விசாகத்தன்று காலை சென்னிமலை முருகன்; முற்பகல் சிவன் மலை முருகன்; உச்சிவேளை கைத்தமலை வேலன்; மாலை அருள்மாலை முருகன்; அஸ்தமன சந்தியில் சீனாபுரமலை முருகன்; அர்த்த ஜாமத்தில் திண்டல் மலை வேலவன் என ஒரேநாளிலேயே அனைவரையும் தரிசித்துவிடலாம். இதை ஏகதின வழிபாடு என்பர். இதனால் நோயற்ற நீண்ட ஆயுள், நிறைந்த வாழ்வு, பேரின்பம் பெறலாம்.

கன்னியாகுமரி நாகர்கோவிலில் அமைந்த குமார கோவிலில் ஒவ்வொரு வருட வைகாசித் திருவிழாவின் ஆறாம் நாளன்று ஆலய நிர்வாகப் பணியாளர் ஒருவர் வள்ளிக்குச் சொந்தமான சொத்துக்களின் விவரங்களை வாசிப்பது வழக்கம். இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான்.

திருத்தணியில் பல தீர்த்தங்கள் உள்ளன. இதில் குமார தீர்த்தமும் ஒன்று. இங்கு வைகாசி விசாகத்தன்று நீராடி முருகப் பெருமானை வழிபட்டால் சகலவிதமான தோஷங்களும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

இலங்கையில் கதிர்காமம் நல்லூர் கந்தசாமி கோயில், மாவிட்டபுர கந்தசாமி கோயில், வில்லூன்றி கந்தசாமி கோயில், கொழும்பு சுப்ரமணியர் கோயில், மேலைப்பூவேலி பூச்சந்தி கோயில்கள் இலங்கையின் அறுபடை வீடுகள். இலங்கை கதிர்காமத்தில் செப்பு ஓடால் வேயப்பட்ட கொட்டகைதான் முருகனின் ஆலயம். முன் வாசலில் 7 திரைகள் உள்ளன. 7-வது திரையில் முருகன் மயில் மீது இரு தேவியருடன் அமர்ந்த ஓவியம் உள்ளது. திரைக்குப் பின் பெட்டியில் சடாட்சர மந்திரம் யந்திரவடிவில் உள்ளது. இங்கு பூஜை அபிஷேகம் யாவும் மரகத வேலுக்குத்தான். இங்கு நடைபெறும் வைகாசி விசாக விழாவில் ஆறுமுகப் புறப்பாடு மிகப் பிரபலம். கன்னியாகுமரியில் வைகாசி விசாகத்திருவிழா சிறப்பாக நடக்கும். முதல் நாள் கொடி ஏற்றம் நடைபெறும். கொடிமரத்துக்கான கயிறை மீனவகுப்பத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் தான் தேங்காய் நாரினால் திரித்துத் தருவார்கள். இது ஆண்டுதோறும் நடக்கிறது. இவ்வாலயத்தில் கிழக்கு வாயிற் கதவு எப்போதும் மூடியே இருக்கும். வைகாசி விழாவில் குதிரை வாகன உலாவின்போது மட்டும் இதைத் திறப்பார்கள். வீதியுலா முடிந்த பின் மீண்டும் வாயில் மூடப்படும்.

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் முருகப்பெருமானுக்கு அழகான கோயில் கட்டப்பட்டுள்ளது. வட இந்தியர்கள், சீக்கிய இனத்தவர்கள் மற்றும் தென்னியந்தியர்கள் என அனைவரும் ஒன்று கூடி வாழும் இங்கு தோழமையுடன் கட்டிய சிறிய அளவிலான கோயில் இது! அடிக்கடி இசை மற்றும் பண்டிகைக் காலங்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் என நடத்தி வந்தனர். கோயிலை விரிவுபடுத்தி மற்ற தெய்வங்களுக்கும் சன்னதிகள் அமைத்துள்ளனர்.

முருகப்பெருமான் வடக்கு திசை நோக்கி தண்டாயுதபாணியாக அருள்பாலிக்கும் தலம் கல்லணையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடைபெறும் திருவிழாவில் 5ம் நாள் நடைபெறும் தீமிதித் திருவிழா, மிகவும் பிரபலம். பிரமாண்டமான பூக்குழியை பலநூறு பக்தர்கள் ஆவேசம் பொங்க கடந்து செல்லும் காட்சி அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தும்.

திருச்சியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள மேலகல்கந்தார் கோட்டையில் உள்ளது பாலமுருகன் ஆலயம். கருவறையில் முருகன் நின்ற கோலத்தில் இருக்க, அவருக்கு முன் அன்னை மாரியம்மன் அமர்ந்த கோலத்தில் பாலமுருகனுக்கு பாதுகாவலாய் உள்ளாள். அன்னையுடன் அருள்பாலிக்கும் பாலமுருகனை வணங்குவதால், குழந்தைப்பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

லால்குடியிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது மணக்கால் சுப்ரமணியசுவாமி கோயில். வைகாசி விசாகம் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் நடைபெறும் இந்த ஆலயத் திருவிழாவின் போது அருகிலுள்ள வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சகிதராக இங்கு வந்து சேவை சாதிப்பது ஓர் அபூர்வ நிகழ்ச்சி!

சீர்காழிக்கு மேற்கே 4 கி.மீ. யில் கொண்டல் என்ற கிராமத்தில் அருள்பாலிக்கிறார் குமார சுப்ரமணிய சுவாமி. தங்கள் மகளுக்கு மணமாக வேண்டும் என்று எண்ணும் பெற்றோரும் மனம் விரும்பியவரைக் கரம் பிடிக்க விரும்பும் கன்னியரும் இந்த ஆலயம் வந்து முருகனிடம் வேண்டிக் கொள்கின்றனர்.

திருச்சி-சென்னை நெடுஞ் சாலையில் திருச்சியிலிருந்து 44 கி.மீ.யில் செட்டிகுளம் என்ற தலத்தில் உள்ளது, தண்டாயுதபாணி ஆலயம். குழந்தைப்பேறு வேண்டி இந்த முருகனைப் பிரார்த்திக்கும் தம்பதியர் வேண்டுதல் நிறைவேறியதும் அக்குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து வந்து, பிரார்த்தனையை நிறைவேற்றும் காட்சி உள்ளத்தை சிலிர்க்க வைக்கும்!

கோவை காந்திபுரத்திலிருந்து 8 கி.மீ.யில் உள்ளது பாலசுப்ரமணிய சுவாமி ஆலயம். கிரகப் பெயர்ச்சி நாட்களில் இந்த ஆலயத்தில் பலவகை மூலிகைகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்ற விசேஷ யாகம் நடைபெறுகிறது. இந்த யாகத்தில் கலந்து கொள்வதால், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் பாதிப்பு கணிசமாக குறைவது கண்கூடு.

திருப்பூர்நம்பியூர் பாதையில் 15கி.மீ. தூரத்தில் உள்ள உதயகிரியில் முத்து வேலாயுத சுவாமி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள பாறை ஒன்றில் ஐந்து தலை நாகமொன்று புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து நாகதோஷ நிவர்த்தி செய்துகொள்கின்றனர். இவ்வாலயத்திலுள்ள கால பைரவருக்கு தனிச் சன்னதி அமைந்துள்ளது. அதுபோலவே சகஸ்ரலிங்கம், பஞ்சலிங்கங்களுக்கும் தனித் தனி விமானங்களுடன் கூடிய சன்னதிகள் அமைந்துள்ளன. ஆலயத்தின் மதிற் சுவர்களில் மீன் இலட்சணைகள் சிற்பங்களாக உள்ளதால் இக்கோயில் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் அமையப் பெற்றதோ எனத் தோன்றுகிறது. ஆலயத்தின் வடபுறம் அழகிய சரவணப் பொய்கையுள்ளது.

பூனாவில் உள்ள பார்வதிமலை கோயிலில் முருகப்பெருமான் பளிங்கு கற்களால் அமைக்கப்பட்டு ஆறுமுகங்களுடன் காட்சி தருகிறார். திருக்கழுக்குன்றம் மலை மீதுள்ள வேதகிரீசுவரர் ஆலயத்தில் முருகப்பெருமான் ஆறு திருக்கரங்கள் கொண்டு மயில் மீது அமர்ந்த நிலையில் தேவியர் இருவருடன் காட்சி தருகிறார். மயிலின் திருமுகம் வடக்கு நோக்கியுள்ளது. மற்றொரு சன்னதியில் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு, நின்ற கோலத்தில் இருபுறமும் தேவியர் இருக்கக் காட்சி தருகிறார் கந்தன்.

சென்னிமலையில் இரண்டு முகங்கள், எட்டு கரங்கள் கொண்டு யாக அக்னியை வளர்க்கும் அக்னி ஜாதகர் என்னும் அரிய திருவுருவத்தில் இருக்கின்றார். கோவில்பட்டி அருகே உள்ளது கழுகுமலை. இங்குள்ள முருகன் ஆறு கரங்களுடன் மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். இங்கு முருகனின் இடப்பக்கத்தில் மயில் உள்ளது. ஆலயத்திலுள்ள நூறு தூண்களிலும் ராமர் மற்றும் ஆஞ்சநேயரின் உருவங்கள் காட்சி அளிக்கின்றன. விராலிமலை மூலவர் சண்முகர், மயில் மீது அமர்ந்து கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். இத்தலப் பெருமானுக்கு சுருட்டு நிவேதனம் செய்கிறார்கள்.

குழந்தை வடிவில் மயிலுடன் காட்சிதரும் முருகனை, நாகர்கோயிலிலிருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ள வெள்ளிமலை மேல் உள்ள கோயிலில் தரிசிக்கலாம். திருச்செந்தூரில் தியானக் கோலத்தில் காட்சிதரும் முருகன், செம்பனார்கோயிலில் ஜடா மகுடத்துடன் தவக்கோலத்தில் அருள்புரிகிறார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள சிவாலயத்தில் தனிச்சன்னிதி கொண்டுள்ள முருகப்பெருமாள் நாகசுப்ரமணியராகக் காட்சி தருகிறார். இவரது தலையில் நாகம் படமெடுத்த நிலையில் காணப்படுகிறது.

கனககிரி திருத்தலத்தில் கிளி ஏந்திய நிலையில் காட்சி தரும் முருகப்பெருமான், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் கையில் மாம்பழத்துடன் காட்சி தருகிறார். வில். அம்பு ஏந்தி வேட்டைக்குச் செல்வதுபோல் திருவையாறு திருத்தலத்தில் காட்சிதரும் முருகப்பெருமான், கையில் வஜ்ராயுதம் ஏந்திய நிலையில் சுவாமிமலை மற்றும் திருவிடைக்கழி ஆகிய திருத்தலங்களில் அருள்பாலிக்கிறார். திருமயிலாடி, அனந்தமங்கலம், வில்லுடையான் பட்டு, சாயக்காடு, திருக்கடவூர் மயானம் ஆகிய திருத்தலங்களில் வில்லுடனும் முருகன் காட்சியளிக்கிறார்.

கும்பகோணம் அருகிலுள்ள அழகாபுத்தூர் திருத்தலத்தில் சங்கு சக்கரத்துடன் காட்சி தரும் முருகன், புதுக்கோட்டை அருகிலுள்ள ஒற்றைக்கண்ணூர் திருத்தலத்தில் ஒரு கரத்தில் ஜபமாலையுடனும், சின்முத்திரையுடனும் காட்சி தருகிறார். கரூர் மாவட்டம் வெங்கமேடு ஆலயத்தில், வேலாயுதமும் தேவியர் இருவரும் இன்றி தனித்து அருள்புரியும் முருகப்பெருமான், திருச்சி உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் கோயிலில் தனிச் சன்னதியில் ஆவுடையில் நின்ற கோலத்தில் அருளாட்சி புரிகிறார்.

கழுகுமலை, கோடியக்கரை, அழகர்கோயில் ஆகிய திருத்தலங்களில் ஒரு முகம் மற்றும் ஆறு கரங்களுடன் திகழும் முருகப்பெருமான், குடந்தையிலுள்ள வியாழ சோமநாதர் ஆலயத்தில், காலில் பாதரட்சையுடன் அருள் தருகிறார். மருதமலையில் குதிரைமீது அமர்ந்தும், மருங்கூரில் ஆடு வாகனத்தின் மீதும், சென்னை மேற்கு மாம்பலம் முருகாஸ்ரமத்தில் நாகத்தின்மீதும், காங்கேயம் அய்யப்பன் ஆலயத்தில் மீன்மீது நின்றும், திருத்தணி, திருப்பரங்குன்றம், வேலூர், ரத்தினகிரி, பிரான்மலை ஆகிய திருத்தலங்களில் யானையை வாகனமாகக் கொண்டும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.

தென்காசிக்கு அருகில் உள்ள இலஞ்சி முருகன் கோயிலில் மிக வித்தியாசமாகக் காணிக்கை செலுத்துகிறார்கள் பக்தர்கள். இங்குள்ள முருகப் பெருமானை பிரார்த்திக்கும் அடியவர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதும், மாதுளை முத்துக்களால் ஆன வேல் மற்றும் சேவல் கொடியைக் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

பழனிமலை முருகப் பெருமானுக்கு தினமும் இரவு திருக்காப்பிடுதல் வைபவம் நிகழும். முன்னதாக ஆண்டவனின் திருமேனியில் சந்தனம் சாற்றப்படும். இந்த சந்தனத்தை மறுநாள் காலையில் பிரசாதமாக தருவார்கள். இந்தப் பிரசாதத்தை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

தமிழ்நாட்டில் அறுபடை வீடு முருகனுக்கு இருப்பது போல் இலங்கையிலும் முருகனின் ஆறு கோயில்கள் விசேஷமாகக் கருதப்படுகிறது. இதை முருகனுக்குரிய அறுபடை வீடுகளாக சொல்கின்றனர். கதிர்காமம், நல்லூர் கோயில், மாவிட்டபுரம், கொழும்பு, வில்லூன்றி, மேலைப் புலிவேலி என்பவையே அறுபடை வீடுகளாகப் போற்றப்பெறுகின்றன.

பொன்னேரிக்கு அருகில் பெரும்பேடு என்ற தலத்தில் முருகப் பெருமான் ஆறரை அடி உயரத்தில் காட்சி தருகிறார். இடதுபுறம் உள்ள தெய்வானை கிரீடத்துடனும், வலதுபுறம் உள்ள வள்ளி, குறத்திக் கொண்டையுடன் நிற்கிறார்கள். அற்புதமான அமைப்பு இது.

திருத்தணி முருகனின் மார்புப் பகுதியில் ஒரு குழி இருப்பதை அபிஷேக நேரங்களில் காணலாம். தாரகாசுரனால் ஏவப்பட்ட சக்கரத்தை தன் மார்பில் ஏந்தி அங்கேயே பதித்துக் கொண்டதாகவும், பிறகு தம்மைத் திருமால் வேண்டி பூஜித்தபோது மார்பிலிருந்த சக்கரத்தை திருமாலுக்கு முருகன் வழங்கியதாகவும் புராணங்கள் கூறுகின்றன. அதனால்தான் மார்பில் பள்ளமாகக் காட்சி தருகிறது.

கரூர் அருகேயுள்ள திருத்தலம் வெண்ணெய் மலை. இங்கு வேல், மயில் இல்லாமலும், வள்ளி  தெய்வானை தேவியர் இல்லாமலும் தனித்துக் காட்சி தருகிறார் முருகப்பெருமான். அசுர சேனைகளை அழித்தொழித்த முருகப் பெருமான், அவர்களை மூன்று இடங்களில் எதிர்கொண்டாராம். அவை, நீரில் போர்புரிந்த இடம்  திருச்செந்தூர்; நிலத்தில் போர் புரிந்த இடம்  திருப்பரங்குன்றம்; இறுதியாக விண்ணிலே போர் புரிந்த இடம்  திருப்போரூர்.

சென்னை  குன்றத்தூர் முருகன் கோயிலில், தம்பதி சமேதராக திகழும் சுப்ரமணிய சுவாமியை தரிசிக்கலாம். இந்தக் கோயிலின் கருவறை வித்தியாசமாக அமைந்துள்ளது. ஆம்... கருவறையில் அருள்பாலிக்கும் முருகன். வள்ளி  தெய்வானை ஆகியோரை ஒன்றாகத் தரிசனம் செய்ய முடியாது. சன்னதிக்கு நேராக நின்று பார்க்கும்போது முருகப்பெருமானும், ஒருபுறம் நகர்ந்து பார்க்கும்போது வள்ளியும், மறுபுறம் நகர்ந்தால் தெய்வானையும் தெரிவார்கள். திருப்பரங்குன்றத்தில் தெய்வானையை முருகப் பெருமான் திருமணம் செய்துகொண்டு திரும்பும் வழியில் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள செஞ்சேரி மலையில் தங்கியதாகக் கூறப்படுகிறது. இத்தலத்து மூலவர் ஆறு திருக்கரங்களுடன் காட்சியளிப்பது சிறப்பான ஒன்றாகும்.

 
மேலும் வைகாசி விசாகம் »
temple news
தெய்வங்கள் மற்றும் மகான்களின் அவதாரப் தொடர்புடன் கூடிய நட்சத்திரங்கள் மிகவும் சிறப்பாகக் ... மேலும்
 
temple news
வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் இருப்பதால், ஆசைகள் ஈடேறி முடிவில் முக்தி கிடைக்கும். வைகாசி ... மேலும்
 
temple news
கந்தன், சிவகுருநாதன், தண்டபாணி, காங்கேயன், சுவாமிநாதன், தகப்பன் சுவாமி என பல பெயர்களால் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
முருகனின் ஆறுபடைவீடுகளில் முதல்வீடு திருப்பரங்குன்றம். சூரபத்மனை வதம் செய்த முருகன் வெற்றிப்பரிசாக ... மேலும்
 
temple news
படைவீடு என்னும் சொல்லுக்கு, போர் புரிவதற்காக படைத்தளபதி படைகளுடன் தங்கும் இடம் என்று பொருள். முருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar