பதிவு செய்த நாள்
31
மே
2012
05:05
முருகனின் ஆறுபடைவீடுகளில் முதல்வீடு திருப்பரங்குன்றம். சூரபத்மனை வதம் செய்த முருகன் வெற்றிப்பரிசாக தெய்வானையை மணந்த தலம் இதுவாகும். முருகப்பெருமான் திருமணக்கோலத்தில் காட்சிதருவதால் திருமணத் தலமாக விளங்குகிறது. கருவறையில் கற்பகவிநாயகர், துர்க்கையம்மன், சுப்பிரமணியர், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய்ப் பெருமாள் ஆகிய ஐந்து தெய்வங்களுக்கும் சந்நிதிகள் உள்ளன. இங்கு பங்குனியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தில் தெய்வானை, முருகன் திருக்கல்யாண விழா நடக்கிறது.
பதினான்கில் பரங்குன்றம்: மதுரை, திருவேடகம், திருப்பரங்குன்றம், திருஆப்பனூர், பிரான்மலை, திருப்புத்தூர், திருப்புவனவாசல், ராமேஸ்வரம், திருவாடானை, காளையார்கோவில், திருப்புவனம், குற்றாலம், திருச்சுழி, திருநெல்வேலி, திருப்பரங்குன்றம் ஆகிய ஊர்களிலுள்ள கோயில்களை பாண்டி பதினான்கு கோயில் என்பர். இவை தேவாரப்பாடல் பெற்ற தலங்கள். இதில் திருப்பரங்குன்றம் முருகனுக்குரிய அறுபடைவீடுகளில் முதல் தலமாக திகழ்கிறது.
திருப்பரங்குன்றத்தின் பிற கோயில்கள்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலைச் சுற்றி சில கோயில்கள் உள்ளன. கி.பி.,1583ல் கிருஷ்ணவீரப்ப நாயக்கர் கட்டிய கல்மடம், இன்று சொக்கநாதர் கோயில் எனப்படுகிறது. சன்னதி தெருவிலுள்ள இக்கோயில் மூன்று மண்டபங்களுடன் காணப்படுகிறது. பழநியாண்டவர் கோயில் திருமலைநாயக்கரால் திருப்பணி செய்யப்பட்டது. இக்கோயிலின் பின்புறம் சமண சிற்பங்களும் காணப்படுகிறது. ஆறுமுக நயினார் கோயில் என்று அழைக்கப்பட்ட ஆறுமுகசாமி கோயில் சரவணபொய்கை அருகில் உள்ளது. காசி விஸ்வநாதர் கோயில் மலை மேல் உள்ளது. இங்கு சிதைந்த நிலையில் சமணச்சிற்பங்கள் காணப்படுகிறது. இக்கோயிலை சங்கப்புலவர் நக்கீரர் வரலாற்றுடன் இணைத்துக் கூறுவர். பாம்பலம்மன் கோயில் நாட்டுப்புற மக்களின் நாக வழிபாட்டைக் காட்டும் ஒரு சிறிய கோயில். கன்னிமார்கோயிலில் சப்தகன்னியர் எழுந்தருளியுள்ளனர். வெயிலுகந்த அம்மன் கோயில், வீர ஆஞ்சநேயர் கோயில் ஆகியவை ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ளன. தென்பரங்குன்றத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உமையாண்டவர் கோயில் உள்ளது.
ஒரே பீடத்தில் மூன்று வாகனம்: திருப்பரங்குன்றம் வாகனமண்டபத்தில் கருவறைக்கு நேராக மூன்று வாகனங்கள் இருக்கின்றன. இந்த அமைப்பு வேறெந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பாகும். கொடிமரத்திற்கு முன்பாக கற்பகவிநாயகருக்குரிய மூஷிகவாகனமும், சத்தியகிரீஸ்வரருக்குரிய நந்தியும், முருகனுக்குரிய மயிலும் சேர்ந்து ஒரே பீடத்தில் உள்ளன. பிரதோஷ காலத்தில் நந்திக்கு மட்டுமின்றி மூஷிகம், மயிலுக்கும் அபிஷேகம் நடத்தப்படும்.
காவலர் அண்டாபரணர்: முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தில் முருகன் கோயிலில் மகாமண்டபத்திற்குச் செல்லும் படிக்கட்டுகளுக்கு அருகில் பரிவார தெய்வங்களாக உள்ள சந்நிதிகளில் மகாபாரதம் இயற்றிய வேதவியாசர், பராசரர், அண்டாபரணர், உக்கிரர் ஆகிய ரிஷிகளின் சந்நிதிகள் உள்ளன. இதில் அண்டாபரணரும், உக்கிரரும் பூதகணங்களின் தலைவராக இருப்பவர்கள். இருவரும் திருப்பரங்குன்றம் மலையின் பாதுகாவலராக விளங்குகின்றனர். இவர்களை வழிபட்ட பிறகு மலையில் ஏறினால் பாதுகாப்பாக வருவதாக ஐதீகம். மேலும், நமது பணிகளை மனோதிடத்துடன் செய்யும் திறனையும் அருள்வார்.
அன்னபூரணி சந்நிதி: மூலவர் முருகனைத் தரிசித்தபின் கீழே இறங்கினால் கோவர்த்தனாம்பிகை சந்நிதியை அடையலாம். இந்த அம்பிகை சந்நிதிக்கும் செல்லும் வழியில் குகை ஒன்று உள்ளது. அதில் அன்னபூரணி சந்நிதி அமைந்துள்ளது. இந்த சந்நிதியில் தேவர்கள் அனைவரும் அன்னபூரணியை இருகரம் கூப்பி வணங்கிய நிலையிலும், ரிஷிகள் தேவியின் பாதத்தில் அமர்ந்தபடியும் காட்சி தருகின்றனர். நாட்டியமாடும் மங்கையர் சந்நிதியின் பின்புறத்தில் வீற்றிருக்கின்றனர். காசியில் உள்ள அன்னபூரணியை நினைவூட்டும் விதத்தில் அமைந்துள்ள இங்கு தீபாவளியன்று சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த சந்நிதியை தினமும் திறந்து வைத்து ஒளிவிளக்கேற்றி, இதைப் பற்றிய விளக்க போர்டும் வைக்க நிர்வாகம் ஏற்பாடு செய்தால் பக்தர்கள் மகிழ்வர்.
குன்றத்துமுருகனுக்கு உயிர் தந்த குட்டி: முருகப்பெருமானின் முதல்படைவீடான திருப்பரங்குன்றம் கோவிலைக் கவர்ந்து செல்ல ஆங்கிலேய அரசு திட்டமிட்டது. 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இம்முயற்சியை மேற்கொண்டனர். கோயிலைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஊர்ச்சபைக்கு ஓலை அனுப்பினர். ஆனால், ஊர்ச்சபையினர் இதற்கு மிகுந்த ஆட்சேபம் தெரிவித்தனர். ஆங்கிலேயப்படை திடீரென்று திருப்பரங்குன்றம் ஊருக்குள் நுழைந்து விட்டது. செய்வதறியாமல், மக்கள் திகைத்து நின்றனர். மக்களைத் திரட்டி படையை மறிக்க முடியாத நிலை உண்டானது. திடீரென்று குட்டி என்ற இளைஞன் கோயிலை நோக்கி ஓடோடிவந்தான். விறுவிறு என்று கோயில் கோபுரத்தில் ஏறிநின்றான். இந்த அநியாயத்தைத் தடுக்க யாரும் இல்லையா? இதோ! என் முருகனுக்காக முதல்பலியாகிறேன் என்று சொல்லி குதித்துவிட்டான். இச்செய்தி கோயில் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. அடுத்த நிமிஷமே, குட்டி இறந்த செய்தி ஊர் முழுதும் பரவியது. கடலென மக்கள் சூழ்ந்து கொண்டு, எதிர்ப்பு தெரிவித்தனர். நிலைமை மோசமடைவதற்கு முன் ஆங்கிலேயப்படையினர் அவ்விடத்தில் இருந்து ஓட்டம் பிடித்தனர். இன்னுயிர் தந்து பரங்குன்றம் கோயிலைக் காத்த அவ்வீரனுக்கு நம் நன்றிகளைக் காணிக்கையாக்குவோம்.
திருப்பரங்குன்றத்தில் வேலுக்கு அபிஷேகம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருமால், சிவன், முருகன், துர்க்கை, விநாயகர் ஆகிய ஐந்து கருவறைகள் உள்ளன. திருமால் கருவறை மேற்கு நோக்கியும், சிவன் சன்னதி கிழக்கு நோக்கியும். முருகன், துர்க்கை, விநாயகர் கருவறை வடக்குநோக்கியும் உள்ளது. இந்த கோயில் குடைவரை கோயிலாக இருப்பதால் சுவாமிகளின் திருஉருவங்கள் சிற்பங்களாக செதுக்கிவைக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கடுசர்க்கரை படிமம் என்று அழைக்கப்படுகிறது. புற்றுமண், எருதுக்கொம்பு மண், யானைத்தந்தமண், தங்கம், வெள்ளி, இளநீர்சாறு இவைகளை கொண்டுள்ளது. பிரான்மலையிலுள்ள கல்யாண சுந்தரமூர்த்தி, சீர்காழியிலுள்ள தோணியப்பர், திருநாங்கூர் பெருமாள் ஆகிய இறையுருவங்கள் இவ்வகையை சார்ந்ததாகும். சர்க்கரை என்ற சொல் மணல், சுக்கான் தூள், உணவுப்பொருளான சர்க்கரை ஆகியவற்றைக் குறிப்பிடும் பொது சொல்லாகும். இங்கு கடுசர்க்கரை என்பது கடினமான சுக்கான் கற்களைப் பொடித்துக் கிடைக்கம் சிறு கற்களாகும். சுக்கான் பொடியை மண்ணோடு கலந்து பக்குவமான கலவை தயாரித்து, அதைக் கொண்டு படிமம் அமைக்கப்படுவதால் கடுசர்க்கரை எனப்பெயர் பெற்றது. கடுசர்க்கரையை கண்டசர்க்கரை எனப் பண்டையக்கால சிற்பிகள் கூறியுள்ளனர். மனித உடலுக்கு எலும்புக்கூடு வலுவூட்டுவது போல், கடுசர்க்கரைப் படிமத்துக்கு மரத்தாலான சூலம் வலுவூட்டுகிறது. மரத்தால் சிலைகளுக்கு கை, கால், முதுகு, தொடை ஆகிய முக்கிய சூலங்கள் செய்யப்படுகிறது. சூலம் என்ற சொல் தண்டு, கொடி, கரு என்ற பொருள்களைக் குறிக்கிறது. கருநிகர் மரக்கோல்களைக் சூலம் என்று சொல்வது சிற்பத்துறை வழக்காக உள்ளது. மரத்தால் சூலம் அமைப்பதற்கு மாற்றாகக் கல் சூலங்கள் அமைப்பதுண்டு. இவற்றை தாருசூலம், சிலாசூலம் என்று அழைக்கப்படுகிறது. மரத்தால் சிலை செய்து தாரு சூலம் மீது சுதை செய்யும் வழக்கம் பழைய மரபாக இருந்தது. இது மகேந்திரவர்மப்பல்லன் கி.பி.,590-630 காலத்தைச் சேர்ந்ததாகும். இம்முறைக்குச் சூலஸ்தாபனம் என்றழைக்கப்படுகிறது. இதனைப் பெரும்பாலும் வைணவக் கோயில்களில் மட்டுமே காணமுடியும்.
சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள ஸ்ரீரங்கன், ஸ்ரீ அனந்தசயனம் என்னும் கோயில்களின் மூலவிக்கிரகங்கள் சுதையுருவங்களில் இன்றும் காணப்படுவது பண்டைக்காலத்தில் தெய்வவடிவங்கள் சுதையினால் செய்ததற்கான சான்றாக அமைகிறது. இங்கு ஐந்து கருவறைகளிலுள்ள புடைப்புச் சிற்பங்கள் அனைத்தும் கடுசர்க்கரைப்படிமங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால் குடைவரையில் செதுக்கப்பட்ட சுவாமி சிற்பங்களுக்கு அபிஷேகம் செய்யாமல் வேலுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மாறாக செதுக்கப்பட்ட சிற்பங்களுக்கு புனுகு மட்டும் சார்த்தப்படுகிறது.
இருட்டான சுரங்கப்பாதையில் ஜேஷ்டாதேவி: இரவில் நல்ல தூக்கம் வர வழிபாடு: பகலில் தூக்கம் வராமல், இரவில் கெட்ட கனவுகள் இன்றி நல்ல ஆழ்ந்த தூக்கம் வர திருப்பரங்குன்றத்திலுள்ள ஜேஷ்டாதேவியிடம் வழிபட்டு பக்தர்கள் பலனடைந்துள்ளனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொடிமரம் அருகிலுள்ள படிகள், கம்பத்தடி மண்டபத்தையும் ஆறுமுகசமி மண்டபத்துடன் இணைக்கின்றன. இந்த படிகளின் ஒரு ஓரத்தில் கம்பத்தடி மண்டப மூலையில் சிறிய நுழைவுவாயில் உள்ளது. உள்ளே சுமார் நூறு அடி நீளத்தில் இருட்டான சுரங்கப்பாதை உள்ளது. உள்ளே ஜேஷ்டாதேவியின் குடைவரைச்சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் சாத்தன் கணபதி மற்றும் அவருடைய மனைவியான நக்கன் கொற்றி என்பவர்களால் அமைக்கப்பட்டதாகும். தூக்க சுகத்தை அருள்பவள் ஜேஷ்டாதேவி. இரவில் கெட்ட கனவுகளின்றி நல்ல தூக்கம் வருவதற்காக ஜேஷ்டாதேவியை வழிபடுவது இங்கு சிறப்பாகும். அதுவும் பகல் நேரத்தில் தூக்கம் வராமல், இரவு நேரத்தில் மட்டும் நல்ல தூக்கம் வர பக்தர்கள் பிரர்த்தித்து பலனடைந்துள்ளனர்.
தற்போது மூதேவி சுவாமி சன்னதி என்று அழைக்கப்படுவதுடன், வழிபாடற்ற நிலையில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. பொதுவாக கோயில்களில் ஜேஷ்டாதேவி சன்னதி மறைவான இடத்தில் அமைப்பது தான் வழக்கம். ஜேஷ்டாதேவி கால் களை தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் இருக்கையில் உள்ளார். வலக்கரம் தாமரை மலருடனும், இடக்கை தனது இடதுபுறமுள்ள தன்மகளின் வலது தொடையிலும் வைத்த நிலையில் உள்ளார். கச்சணியாத மார்பையும், குண்டலங்களை உடைய காதும், அவருக்கு வலது புறத்தில் எருமைத்தலையும், அவருடைய மகன் இடது காலை மடக்கி, வலது காலைத் தொங்கவிட்டு வலது கரம் மட்டும் தண்டத்தைப்பிடித்த நிலையில் உள்ளது. சிவனது இடது புறத்தில் இவளுடைய மகள் உள்ளார். இரண்டு கரங்களில் வலது கரம் மட்டும் மலரை ஏந்தியுள்ளார். இவருடைய மார்பில் கச்சணியப்பட்டுள்ளது. இச்சிற்பங்கள் புடைப்புச் சிற்பமாகச் செய்யப்பட்டுள்ளது.
சேர்த்தி மண்டபத்தில் உற்சவ மூர்த்தியான முருகன்- தெய்வாøனை எழுந்தருளுகின்றனர். விழாக்காலங்களில் இங்கு திருவுலா திருமேனிகள் அலங்காரம் செய்யப்படுகிறது. நந்தி தேவருக்கு மேற்கு பகுதியிலுள்ள சிறிய மண்டபம் விசாக கொரரு என்றும் அழைக்கப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று ஆறுமுக கடவுளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பால்குடங்களும், பன்னீர், சந்தனம், வீபூதி, பஞ்சாமிர்தம் ஆகிய மணப்பொருட்களையும் பழங்களையும் கொண்டு அபிஷேகம் நடப்பதால், அபிஷேககுவுரு என்று பெயர் வழங்கி வருகிறது. நந்திதேவருக்கு எதிரே இருபக்கத்திலும் வேதவியாசர், பராசரர் ஆகிய இரு முனிவர்களின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பரங்கிரிநாத தலபுராணத்தில் குறிக்கப்படும் இம்முனிவர்களின் உருவங்கள் பிற்காலத்தில் அமைக்கப்பட்டதாகும். கம்பத்தடி மண்டபத்திலிருந்து மகாமண்டபம் செல்லும் வழியில் இருபக்கங்களிலும் இம்மலையைக் காவல் புரியும் காவல் தெய்வங்களான அண்டாபரணருக்கும், உக்கிரமூர்த்திக்கும் குடைவிக்கப்பட்ட சிற்பங்கள் மிகப்பெரிய அளவில் உள்ளது. இப்பூதங்களை இணைத்து நக்கீரர் கதை இங்கு வழங்குகிறது. அண்டாபரணருக்கு அருகே அனுக்ஞை விநாயகர் சிலையும், பிரதோஷ நந்திகேசுவரர் (அதிகார நந்தி) பிரதோஷ அம்மன் இரட்டை விநாயகர் சிலைகளும் அமைந்துள்ளன.
பெருமாளுக்கு பவளக்கனிவாய்ப்பெருமாள் திருநாமம்: திருமால் கருவறை: இது அர்த்த மண்டபத்தில் இடமிருந்து வலமாக முதலில் அமைந்துள்ளது. இ து சதுரவடிவில் அமைந்துள்ளது. இ ங்குத் திருமால் இடக்காலை மடக்கி வலக்காலைத் தாமரைப்பீடத்தின் மீது வைத்து அமர்ந்த கோலத்தில் மேற்கு நோக்கிக் காணப்படுகிறார். தலையில் கிரீடம் அணிந்துள்ளார். காப்பு அணிந்த நான்கு கரங்களில் மேலிரு கரங்களில் சக்கரமும், சங்கும் கொண்டும், கீழ் வலக்கரத்தில் அபயமுத்திரை காட்டியும் கீழ் இடக்கரத்தை தொடை மீது வைத்தும் காணப்படுகிறார். வலப்புறம் மதங்கமா முனிவரும், இடப்புறம் ஸ்ரீதேவியும் கால்களை மடக்கி அமர்ந்த நிலையில் திருமாலின் இருபுறமும் இருவர் சாமரம் வீச, மேற்புறத்தில் வானவர் இருவர் பூமாரி பெய்வது போல் அமைக்கப்பட்டுள்ளது. இத்திருமாலைப் பவளக்கனிவாய்ப் பெருமாள் என்று தலபுராணம் பாடுகிறது. திருமங்கையாழ்வார் இமயக்குறினை பனியே பரங்குன்றின் மேய பவளத்திரளே (பெரியதிருமொழி- ஏழாம் பத்து -7-1-6) என்று பாடியுள்ளார். இத்தொடரை வைத்து இங்குள்ள பெருமாளுக்கு பவளக்கனிவாய்ப் பெருமாள் என்ற திருநாமம் சூட்டியதாக கூறப்படுகிறது.
திருப்பரங்குன்றத்தில் நகரும் தெய்வம்: கோபுர வாசலை கடந்து சென்றால் திருக்கல்யாண மண்டபத்தை அடையலாம். இங்கு பெரிய திருவாட்சி இருப்பதால் திருவாட்சி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. முன்புறம் தேர் இழுக்கும் பாவனையில் இரு குதிரைகள் ஏறும்படியில் உள்ளது. தேரின் இரு சக்கரங்கள் கல்லால் வடிக்கப்பட்டுள்ளது. இரண்டு குதிரைகள் தேரை இழுத்து செல்வது போல் இம்மண்டபம் உள்ளது. இதனால் இதனை குதிரைப்படி மண்டபம் என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். யாகைக்கோயில் (நகரும் தெய்வங்கள்) போன்ற அமைப்புகளில் தேர் போன்ற அமைப்பும் குதிரைகள் யானைகள் இழுத்து வருவது போல் அமைப்பு உள்ளது. இதனால் இங்குள்ள தெய்வ சிலைகள் நகருவதாக நம்பிக்கையுள்ளது. இதுபோன்ற அமைப்பு தாராசுரம், திருநாகேஸ்வரம், கும்பகோணம் (சாரங்கபாணி கோயில்), இவற்றில் காணமுடிகிறது.
இந்த மண்டப தூண்களில் உள்ள சிற்பங்கள் திருவிளையாடற்புராணம் காட்சிகளை விளக்குவதாக உள்ளது. முருகன் தெய்வானை திருமண கோலம், ஊர்த்துவதாண்டவம், காளிங்கநர்த்தனர், பன்றிக்குட்டிகளுக்குப் பாலூட்டும் கோலம், ரதி,மன்மதன், ஆதிசேடன், திரிபுராந்தகர், நரசிங்கப்பெருமாள் உள்ளது. திருமணக்கோலம் ஆஸ்தான மண்டபம் மற்றும் திருவாட்சி மண்டபங்களில் காணப்படுவது சிறப்பாகும். இந்த மண்டபத்தில் ஊஞ்சல் திருவிழா, மட்டையடி உற்சவம், திருக்கல்யாணம் போன்ற திருவிழா நடக்கிறது. மண்டபத்திருவிழாவை சிவகங்கை, ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த குயவர்கள் நடத்தும் உற்சவங்களுக்குப் பயன்படுகிறது.
ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழாவில் நோன்புவிரதம் இருக்கும் பக்தர்கள் இந்த மண்டபத்தில் வந்து தங்கி பயனடைகின்றனர். திருமுறை ஓதுவார்களும் தினசரி இந்த மண்டபத்தில் அமர்ந்து தேவாரத்திருப்புகழ் பாராயணம் செய்கின்றனர். இதுதவிர திருவிளக்கு வழிபாடு, சொற்பொழிவுகள், இசையரங்குகள் இவற்றிற்கும் இந்த மண்டபம் பயன்படுகிறது. மண்டபத்தின் கீழ்பகுதியில் வசந்த மண்டபம், ஒருக்கமண்டபம், தீர்த்த குளமும் (லட்சுமி தீர்த்தம்), மண்டபத்தின் மேற்கு பகுதியில் சன்னியாசி கிணறு தீர்த்தம் செல்லும் வழியும் உள்ளது. இந்த வழியில் மடைப்பள்ளி மண்டபம், வல்லபகணபதி சன்னதியும், கம்பத்தடி மண்டபத்துடன் இணைகிறது. திருவிழா காலங்களில் உற்சவமூர்த்தி இவ்வழியாக வருகிறார்.
சூரபதுமனை அழிக்க வில்லேந்திய முருகன்: ஆறுமுகப்பெருமானின் அற்புதக் கோலங்களில் ஒன்று வில்லேந்திய வேலவர். ராமருக்கு வில் இருப்பது போல் வில்லேந்திய முருகனையும் திருப்பரங்குன்றத்தில் காணலாம். முருகனை வழிப்பட்டால் அனைத்து நலன்களும் கிடைக்கும். வில்லேந்திய வேலவரை வழிபட்டால் அனைத்து வினைகளும் மின்னல் வேகத்தில் அழியும். வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு எவ்வளவு வேகமாக இலக்கை நோக்கி செல்லுமோ அதேபோல் வில்லேந்திய வேலவரின் அருள் நமக்கு வினை தீர்க்க உதவும். திருப்பரங்குன்றம் கோயிலில் நுழைந்தவுடன் முதலாவதாக உள்ளது ஆஸ்தான மண்டபம். அரசன் கொலு வீற்றிருக்கும் மண்டபம் என்பதால் கொலு மண்டபம் என்று பெயர் ஏற்பட்டது. காலப்போக்கில் கொலு மண்டபத்திலுள்ள பத்து பெரிய தூண்களில் சுவாமி சிலைகள் அமைக்கப்பட்டன. நுழைவுவாயிலில் இரண்டரை அடி உயரத்தில் நான்கு குதிரை வீரர்களும், யாளிகளும் அமைந்துள்ளன. நாயக்கர் காலத்துப்போர் வீரர்கள் இத்தூண் சிற்பங்களை தாங்கியுள்ளனர். இம்மண்டபத்தின் மேற்கு பகுதியில் சுதைச்சிற்பங்களாக முருகன், துர்க்கை, நர்த்தன விநாயகர் சிலைகள் உள்ளன. இம்மண்டபம் 116 அடி நீளமும், 94 அடி அகலமும், 30 அடி உயரமும் கொண்டதாகும். இங்கு 48 தூண்கள் உள்ளது. இத்தூண்கள் அனைத்திலும் நாயக்கர் காலச்சிற்பங்கள் காணப்படுகின்றன. ஒரு சில தூண்களிலுள்ள இறையுருவங்களுக்கு வழிபாடுகளும் நடக்கிறது.
மண்டபத்தில் துவாரபாலகர்கள், மகிஷாசுரமர்த்தினி, நர்த்தன கணபதி, திருமால், அரசி மங்கம்மாள், மன்னர் விஜயரங்க சொக்கநாதர், முருகன்- தெய்வானை திருமண கோலம், நடராஜர், கோதண்டராமர், ஆதிசேடன், ஊர்த்தவத்தாண்டவர், வடபத்திரகாளி, கருப்பண்ணசுவாமி ஆகிய சிற்பங்கள் உள்ளன. இந்த மண்டப அமைப்பு தூண் சிற்பங்கள் அமைப்பு மதுரையிலுள்ள மண்டப அமைப்புகளைப் பின்பற்றியே அமைந்துள்ளது. மதுரை மண்டபங்கள் தோன்றிய சமகாலத்திலேயே இந்த மண்டபங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்தான மண்டபத்தின் வலதுபுரத்தில் கருப்பண்ணசுவாமி வலது கையில் அரிவாளும், இடது கையில் தண்டம் முருக்கிய மீசையுடன், தலையில் கொண்டையுடன் காணப்படுகிறார். கருப்பண்ண சுவாமி வழிபாடு பெருவிழாவாக இங்கு நடத்தப்படுகிறது. முருகனை வழிபடும் முன் கருப்பண்ண சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும் என்பது இங்கு நம்பிக்கையாக உள்ளது.
மண்டபத்தின் நடுபகுதியில் முருகன் தெய்வானை திருமண கோலம் அமைந்துள்ளது. இந்திரன் நீர்வார்த்து கொடுப்பதும், நான்முகன் தீ வளர்ப்பதும் ஒரே தூணில் காணப்படுகிறது. தெய்வாணை நாச்சியார் கல்யாணத்தூணுக்கு எதிரே உள்ள தூணில் அரசி மங்கம்மாளும், சொக்கநாத நாயக்கரும் இத்திருமணக்காட்சியை வணங்கும் சிற்பம் நித்திய அஞ்சலி கோலத்தில் அமைந்துள்ளது.
மண்டபத்தின் இடது ஓரத்திலுள்ள தூணில் சுப்பிரமணியர் வில்லேந்தி சூரபதுமனை அழிக்க போருக்கு புறப்பட்டு தயார் நிலையில் இருப்பது போன்று சிலை வடிக்கப்பட்டுள்ளது. முதுகிலுள்ள அம்பை எடுத்து வில்லில் பொறுத்த முயற்சிப்பது போன்று சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் எதிரில் சூரபதுமனும் சுப்பிரமணியருடன் போர் தொடுக்க தயார் நிலையில் இருப்பது போன்ற சிலை காணப்படுகிறது. போர்க்காட்சியை நடராஜர், சிவகாமி சிலைகள் பார்வையிடுவது போன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த வில்லேந்திய வேலவரை வழிப்படுவதன் மூலம் பக்தர்களின் அனைத்து வினைகளும் மின்னல் வேகத்தில் அழியும். வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு எவ்வளவு வேகமாக இலக்கை நோக்கி செல்லுமோ அதேபோல் திருப்பரங்குன்றத்திலுள்ள வில்லேந்திய வேலவரின் அருள் நமக்கு வினை தீர்க்க உதவும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
இந்த மண்டபத்தில் அரசி மங்கம்மாளின் உருவச்சிற்பம் மதுரை நகரா மண்டபத்தில் உள்ளது போல் இங்கு காணப்படுவதால் இந்த மண்டபம் இவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. புடைப்புச்சிற்பம், கட்டிடச் சிற்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் தங்குவதற்காக இந்த மண்டபம் அரசர்கள் காலத்தில் கட்டப்பட்டது. தற்போது பக்தர்கள் அமரும் இடமாகவும், கோயில் கடைகள் அமைந்துள்ள இடமாக உள்ளது.
துர்க்கை சந்நிதியில் நித்திய அஞ்சலியில் நந்தி: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கும் திருக்கல்யாண மண்டபத்துக்கு அருகே கம்பத்தடி மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் நடுவில் கொடிகம்பம் இருப்பதால் இம்மண்டபத்துக்கு இப்பெயர் வந்தது. கொடிகம்பம் செப்பு தகட்டால் வேயப்பட்டுத் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. திருமலைநாயக்கரால் மண்டபம் திருப்பணி செய்யப்பட்டது. கொடிகம்பத்தின் அருகில் விநாயகர், தெற்கில் மயில் மீது அமர்ந்த ஆறுமுகசாமியும், கிழக்கில் பன்றி கத்தி, சூரியன், சந்திரன் மரம் ஆகிய சிற்பங்களும், மேற்கில் சூரியன், சந்திரன், நந்தி ஆகிவையும் உள்ளன. நாயக்க அரசர்களின் கொடிகளில் காணப்படும் பன்றி, கத்தி, சூரியன், சந்திரன், மரம் ஆகிய உருவங்கள் இக்கொடிகம்பத்திலும் காணப்படுகிறது. கொடி கம்பத்துக்கு பின்புறம் பலிபீடம் அமைந்துள்ளது. பலிபீடத்துக்குப் பின்புறம் கருவறையை நோக்கி பெரிய நந்தியும், அதன் வலப்புறம் பெருச்சாளியும் (மூஷிகம்), இடப்புறம் மயிலும் உள்ளன. நந்தியின் உருவம் கருவறையில் உள்ள துர்க்கையை நோக்கி நேராய் அமைந்துள்ளன.
கோயிலில் முருகன் சன்னதிக்கு இடப்பக்கத்தில் அர்த்த மண்டபத்தின் மையப்பகுதியில் நேராக அமைந்துள்ளது. துர்க்கை மகிஷாசுரன் தலையின் (எருமைத்தலை) மீது நீன்ற கோலத்தில் காணப்படுகிறாள். நான்கு கரங்களில் மேலே உள்ள கைகளில் சக்கரமும், சங்கும், கீழே உள்ள கைகளில் அபயமுத்திரை, கடகமுத்திரை காணப்படுகிறது. அருகே முனிவரும், பணிப்பெண் ஒருத்தியும், தேவகணங்களும் உள்ளனர்.
துர்க்கையை சிவதுர்க்கை, விஷ்ணுதுர்க்கை என இருவகையாக பிரிக்கப்படுகிறது. சிவதுர்க்கையின் இடதுகையில் சங்கும், வலக்கையில் சக்கரமும் உள்ளது. ஒரு சில சிவன் கோயில்களில் விஷ்ணு துர்க்கையும் இருப்பதுண்டு. இங்குள்ள துர்க்கையின் வலது கையில் உள்ள சக்கரமும் பிரயோக நிலையில் உள்ளது. துர்க்கையின் பிற வடிவங்களாக உயிர்களை ஆக்கலுக்கு மகா காளியும், அழித்தலுக்கு மகாமாரியும், செல்வம் கொடுத்தலுக்கு இலக்குமியும், செல்வம் அழித்தலுக்கு அலக்குமியும் சொல்லப்பட்டுள்ளனர். இங்கு மக்கள், முனிவர்கள் புடைசூழ வீற்றிருக்கும் ஆதிபுவனேசுவரியும், பிரயோகச் சக்கரம் வலக்கையின் கொண்ட துர்க்கையும், கஜலட்சுமியும், ஜேஷ்டாதேவி ஆகிய நான்கு சாமி திருஉருவங்கள் குடைவரைச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது. இவை ஆக்கல், அழித்தல், கொடுத்தல், கெடுத்தல் என்ற நான்கு குணங்களை வெளிப்படுத்தும் வகையில் வடிக்கப்பட்டுள்ளன.
துர்க்கை சந்நிதியில் நந்தியை அமைக்கும் வழக்கம் முற்காலத்தில் இருந்துள்ளது. குறிப்பாக நந்தி தேவர், துர்க்கையை சிவசொரூபிணியாய் நித்திய அஞ்சலி செய்வதாக அமைப்பது வழக்கம். பழைய தேவி சந்நிதிகள் சிலவற்றில் இன்றும் நந்தி வாகனத்தையே காணமுடிகிறது. இந்நந்தி அங்குள்ள தேவி சிவசொரூபிணி என்பதைக் காட்டுவதாக அமைகிறது. அபூர்வமாக துர்க்கை எதிரில் நந்தி அமர்ந்திருப்பது திருப்பரம்குன்றம் கோயிலில் விஷேசமானதாகும். தேவி வழிபாடு நிகழ்த்தும் போதும், சிவபதவிரதையே நம, என வணங்குவதும் சிவனருளாக விளங்குபவளே சக்தி என்பதை நன்கு உணர்த்துகிறது. இங்குச் சிவனுக்கு வேறாக தேவிக்கு முதன்மை தந்து வழிபடும் வழக்கமில்லை. தேவியின் முன்பு நந்தி வாகனத்துக்கு வேறாகச்சிம்ம மரபில் ஒரு புதிய வளர்ச்சி என்று கூறப்படுகிறது. இதுதவிர இம்மண்டபத்தில் நான்கு யாளி தூண்களும், இருநாயக்கர் அரசர்களுடன் திருஉருவசிலைகள் சந்நிதியை நோக்கி நித்திய அஞ்சலி செய்யும் கோலத்தில் இரண்டு தூண்களுடன் அமைந்துள்ளன.
கோபுர வாயில்: திருப்பரங்குன்றம் கோயில் ராஜகோபுரம் வீரப்ப நாயக்கரால் 1505ம் ஆண்டு 150 அடி உயரத்தில் கட்டப்பட்டது. கோபுரத்தின் கீழ்பகுதி கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. ராஜகோபுரம் ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது மற்றும் 11 என்ற நிலையில் அமைப்பது வழக்கம். ஒன்றன் பின் ஒன்றாக பெருகி கொண்டே போகும். ஏழு வாயில் உள்ள ஐம்பொறிகள், மனம், புத்தி ஆகிய ஏழையும் குறிக்கும். நம்முடைய உடல் அமைப்பில் உள்ள வெவ்வேறு தத்துவங்களுக்கு கோபுர வாயில்கள் சின்னங்களாக அமைந்துள்ளது. கோபுர நுழைவுவாயிலில் இரண்டு பெண்கள் கொடியுடனும், இரு நாயக்க அரசர்களும் காணப்படுகின்றனர். கோபுர வாயிலின் நடுவே கீழ்த்திசை நோக்கி கோபுர விநாயகர் உள்ளார். இக்கோபுரத்தையும், திருமதிலையும் முதலாம் கிருஷ்ணப்பநாயக்கரின் (1564-1572) மகனான வீரப்ப நாயக்கர் (1572-1595) கி.பி., 1583ல் கட்டினார் என்று கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோபுர வாயிலின் மேற்கு திசையில் யானைக் கட்டும் தறியும் அமைந்துள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் 12 மாத பவுர்ணமி விஷேசம்
சித்திரை: சித்திரா பவுர்ணமி, அழகர் ஆற்றில் இறங்குதல்.
வைகாசி: விசாகம், மொட்டையரசு.
ஆனி: முப்பழப்பூஜை.
ஆடி: பால்குடம் மற்றும் சுவாமி புறப்பாடு.
ஆவணி: ஆவணிஅவிட்டம் (பூணூல்).
புரட்டாசி: மஹாயளபடி ஆரம்பம்.
ஐப்பசி: அன்னாபிஷேகம்.
கார்த்திகை: மகாதீபம்.
மார்கழி: திருவாதிரை.
தை: பூசம் திருவிழா.
மாசி: சிவராத்திரி திருவிழா.
பங்குனி: உத்திரம் திருவிழா.