குமாரபாளையம்: குமாரபாளையம், சவுண்டம்மன் கோவில் திருவிழாவில் வீரகுமாரர்கள் கத்தி போட்டவாறு அம்மனை அழைத்து வந்தனர். ஆண்டுதோறும் தைப்பொங்கலின்போது, குமாரபாளையம் சவுண்டம்மன் கோவிலில் சக்தி அழைப்பு, சாமுண்டி அழைப்பு மற்றும் மகா ஜோதி என, மூன்று நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். அமைச்சர் தங்கமணி வழிகாட்டுதல்படி கோவில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி, மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவை, ஒரே நாளில் நடத்த ஏகமனதாக தீர்மானித்தனர். நேற்று, பொங்கல் நாளன்று மூன்று விழாக்களும் நடந்தன. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.