காஞ்சிப் பெரியவர் 1894, மே20ல் விழுப்புரம் நகரில் அவதரித்தார். இவரது தந்தை சுப்பிரமணிய சாஸ்திரிகள். தாயார் லட்சுமி அம்மையார். இவர்களுக்கு சுவாமிகளைத் தவிர நான்கு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். இதில் சுவாமிகள் அவர்களின் இரண்டாவதாகப் பிறந்தவர். சுவாமிநாதன் என்ற பெயரே சுவாமிகளுக்கு பெற்றோர் சூட்டியதாகும். இவர்களது குலதெய்வம் சுவாமிமலை சுவாமிநாதன். அவரது பெயரே சுவாமிகளின் பெயராக அமைந்தது. சுவாமிநாதன் எட்டுவயது வரை தந்தையிடமே கல்வி கற்றார். பின் திண்டிவனம் ஆற்காடு அமெரிக்க மிஷன் உயர் நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பில் சேர்ந்தார். இப்பள்ளியில் கண்டிப்பும் ஒழுங்கும் நல்ல முறையில் இருந்தன. அறிவுக்கூர்மையுடன் நன்கு ஆர்வத்துடன் படித்து வந்தார். ஆண்டு தோறும் பைபிள் ஒப்புவித்தல் போட்டி நடப்பது வழக்கம். இப்போட்டியில் எப்படியும் பரிசு பெற்று விடுவது என்ற உறுதியுடன் சுவாமிநாதன் படித்து முதல்பரிசும் பெற்றார்.இவர் வெற்றி பெற்றது அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்தது. எல்லா ஆசிரியர்களும் சுவாமிநாதனைப் பாராட்டி மகிழ்ந்தனர். ஒருசமயம் அப்பள்ளியை ஆய்வு செய்ய உதவிக்கல்வி அதிகாரி மஞ்சக்குப்பம் சிங்காரவேலு முதலியார் வந்திருந்தார். கண்டிப்பு மிக்க அவர், மாணவர்களின் கல்வித்திறனை அறிய சிக்கலான பல கேள்விகளைக் கேட்டார். சுவாமிநாதனின் தெளிவான பேச்சு அதிகாரியின் கவனத்தை ஈர்த்தது. நிச்சயம் இந்த மாணவர் எதிர்காலத்தில் உயர்ந்தநிலையை அடைவார் என்று பாராட்டிச் சென்றார்.
சுவாமிநாதன் அப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியின் ஆண்டு விழாவில் ஷேக்ஸ்பியர் எழுதிய ஜான்மன்னர் என்ற நாடகத்தை நடத்த பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. நாடகத்தின் முக்கிய கதாபாத்திரமான ஆர்தர் இளவரசர் வேடத்தில் நடிப்பதற்கு சுவாமிநாதனைத் தேர்ந்தெடுத்தார் தலைமையாசிரியர். நாடகத்தில் நடிப்பதற்கு தன்னைத் தேர்ந்தெடுத்ததை அறிந்து சுவாமி நாதன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. சுவாமிநாதனின் பெற்றோருக்கோ இதில் உடன்பாடில்லை. ஆனாலும், தன் பெற்றோரைச் சம்மதிக்க வைத்தார் சுவாமிநாதன். அவரது விருப்பப்படியே பெற்றோர் நாடகஉடைகளை தைக்க ஏற்பாடு செய்தனர். இரண்டே நாட்களில் ஜான் மன்னருக்குரிய வசனங்களை மனப்பாடம் செய்து, அருமையாக நடித்தார். நாடகத்தைக் கண்ட தலைமை விருந்தினர் பிஷப், சுவாமிநாதனைப் பாராட்டி மகிழ்ந்தார். இன்று ஜான்மன்னரை நேரடியாக சுவாமி நாதனின் நடிப்பில் கண்டேன் என்று சொல்லி முதல்பரிசை வழங்கினார். அந்த சுவாமிநாதனே காஞ்சி காமகோடி 68வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சுவாமிகளாகி நமக்கு அருள்பாலித்தார்.