தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில், சுமார் 5 கி.மீ, தொலைவில் உள்ளது ஈச்சங்குடி கிராமம். காவிரி வடகரையில் அமைந்துள்ள இந்த ஊருக்கு மிகப் பெரிய பெருமை உண்டு. நடமாடும் தெய்வம் என அனைவராலும் போற்றப்படுகிற காஞ்சி மகானை ஈன்றெடுத்த தாயார் மகாலட்சுமி அம்மாள் பிறந்த புண்ணிய பூமி இது!
மகா பெரியவா ஒருமுறை ஆந்திர மாநிலம் நகரியில் முகாமிட்டிருந்தபோது, தாயார் சிவபதம் அடைந்துவிட்டார் எனும் தகவல் பெரியவாளுக்கு வந்தது என்பார்கள். வருடங்கள் பல கடந்த வேளையில், காஞ்சி மகானுக்குச் சட்டென்று உதித்தது அந்த எண்ணம்... ஈச்சங்குடியில் தாம் பிறந்த இல்லத்தில், வேதபாடசாலை அமைக்கவேண்டும். அங்கே சதாசர்வகாலமும் வேதங்கள் முழங்கிக்கொண்டே இருக்கவேண்டும்! இதை ஒரு எண்ணமாக, விருப்பமாக பெரியவா சொல்ல.. அன்பர்களின் முயற்சியால், உடனே அந்த வீடு வாங்கப்பட்டது. அடுத்து, பெரியவாளின் அனுக்கிரகத்தால் திருப்பணிக் கமிட்டி ஒன்றும் உருவானது. வேதம் மட்டுமல்ல ஜோதிடம், தர்மசாஸ்திரம் மற்றும் பள்ளிக் கல்வியும் இங்கே கற்றுத் தரப்படும். விருப்பமும் தகுதியும் கொண்ட மாணவர்கள் சேர்ந்து பயன்பெறலாம். ஈச்சங்குடி வேதபாடசாலை வேத கோஷத்தை காதாரக் கேளுங்கள். காஞ்சி மகானின் பேரருளைப் பெறுங்கள்.