பதிவு செய்த நாள்
21
ஜன
2021
03:01
பல்லடம்: சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் சிவநாமத்தை இழிவுபடுத்தி விமர்சித்ததற்கு, காமாட்சிபுரி ஆதீனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக, கருத்து சுதந்திரம் என்ற பெயரில், இந்து மதத்தையும், மதம் சார்ந்த நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தும் விதமாக பேசுவது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில நாட்களுக்கு முன், கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி யூடியூபில் வெளியிடப்பட்ட பதிவு கடும் விமர்சனத்துக்கு ஆளானது. இந்து மதத்தினர் மட்டுமன்றி, பல்வேறு மதம் சார்ந்த ஆன்மீக பெரியோர்கள், மதகுருமார்கள், ஆதீனங்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இச்சம்பவம் ஓய்வதற்கு முன்பாக, கந்தபுராண பாடல் வரிகளை மாற்றி அமைத்து, அதன் மூலம் தி.மு.க., விளம்பரம் தேட முயன்றது. தி.மு.க.,வினரின் இச்செயலுக்கும் எதிர்ப்பு தெரிவித்து விமர்சனங்கள் எழுந்தன. இச்சூழலில், சென்னையை சேர்ந்த சிவயோகி சிவக்குமார் என்பவர் சிவநாமத்தை இழிவுபடுத்தும் விதமாக முகநூலில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இது குறித்து காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் கூறுகையில், சைவர்களும், சிவனடியார்களும் அனுதினமும் போற்றி வணங்கும் திருச்சிற்றம்பலம் எனும் சிவ நாமத்தை சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் தரக்குறைவாக விமர்சித்து விளம்பரம் தேட முயன்றுள்ளார். மத நம்பிக்கையை சீர்குலைக்கும் எழில் ஈடுபடும் இது போன்ற நபர்களை வன்மையாக கண்டிக்கிறோம். தினந்தோறும் இந்து தர்மத்தையும், தமிழர்களுடைய மனம் புண்படும்படியும் ஆன்மீகத்தை கொச்சைப்படுத்தும் செயல் வாடிக்கையாகி வருகிறது. லட்சக்கணக்கில் கோவில்களில் கூடும் பக்தர்கள் இதற்குத் தக்க பதிலடி கொடுக்காவிட்டால் நாம் இந்துக்களாக வாழ்வதில் அர்த்தமில்லை. இது போன்ற தேச துரோகிகளை குண்டர் சட்டத்தில் அடைத்து இவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.