பதிவு செய்த நாள்
21
ஜன
2021
05:01
உடுமலை : உடுமலை, ஆல்கொண்டமால் கோவிலுக்கு, 36 கன்றுகள், 6 ஆடுகளை விவசாயிகள் தானமாக வழங்கி வழிபட்டனர்.
உடுமலை அருகேயுள்ள சோமவாரபட்டியில், கால்நடைகளை காக்கும் தெய்வமாகவும், வேளாண் வளம் செழிக்கவும், வேண்டியவருக்கு வேண்டியதை அருளும், ஆல்கொண்டமால் கோவில் உள்ளது.இக்கோவிலில், ஆண்டுத்திருவிழாவாக, தைப்பொங்கல், தமிழர் திருநாள் திருவிழா நடந்தது. சுற்றுப்புற பகுதிகளிலிருந்து, பல லட்சம் விவசாயிகள் கோவிலுக்கு வந்து, தங்களது மாடுகளிலிருந்து கறந்த பாலை கொண்டு வந்து, சுவாமிக்கு அபிேஷகம் செய்து வழிபட்டனர்.கால்நடை வளம் சிறக்கவும், கால்நடைகளை நோய் தாக்காமல் இருக்கவும், நேர்த்திக்கடனாகவும் உருவாரங்களை, சுவாமிக்கு வைத்து வழிபாடு செய்தனர். தைப்பொங்கல் முதல் நாள் அன்று பிறக்கும் கன்றுகள், ஆல்கொண்டமாலுக்கு சொந்தம் என, கால்நடைகளை தானமாக வழங்குவதையும் பாரம்பரியமாககொண்டுள்ளனர்.நடப்பு ஆண்டு திருவிழாவில், 36 பசு மாட்டு கன்றுகள், 6 வெள்ளாடு மற்றும் ஒரு கோழி ஆகியவற்றை, விவசாயிகள் தானமாக வழங்கினர். அவற்றை, பெற்றுக்கொண்ட கோவில்நிர்வாகிகள், கோசாலை அமைத்து பராமரித்து வருகின்றனர்.