பதிவு செய்த நாள்
25
ஜன
2021
11:01
அன்னூர்: குமரன்குன்று கோவிலில், தைப்பூசத் தேரோட்டம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னூர் அருகே பழமையான, பிரசித்தி பெற்ற குமரன்குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், தைப்பூச தேர்த்திருவிழா எட்டு நாட்கள் விசேஷமாக நடைபெறும்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து காவடி சமர்ப்பித்து, வழிபட்டுச் செல்வர். கொரோனா பரவல் காரணமாக, இந்த ஆண்டு தைப்பூச தேரோட்டத்திற்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வருகிற 28ம் தேதி தைப்பூச நாளன்று காலை 6:00 மணிக்கு அபிஷேக பூஜையும், இதையடுத்து, 7:00 மணிக்கு அலங்கார பூஜையும், 8:00 மணிக்கு மகா தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் கல்யாண சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானை சமேதரராக உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலிக்கிறார்.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், தைப்பூசத்தின் முக்கியத்துவத்தை அறிந்து தமிழக அரசே இந்த ஆண்டு முதல் பொது விடுமுறை அறிவித்துள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகம் தேரோட்டத்துக்கு தடை விதித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பல கோவில்களில் தேரோட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கோவை மாவட்டத்தில் அனுமதி வழங்கவில்லை. மாவட்ட நிர்வாகம் தைப்பூச தேரோட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.