பதிவு செய்த நாள்
02
ஜூன்
2012
10:06
சென்னை: மதுரை ஆதீனத்தின் மரபுகளை நித்யானந்தா வெளிப்படையாகவே மீறி வருவதையும், அவற்றை 292வது மடாதிபதி அருணகிரிநாத தேசிகர் கண்டும் காணாமல் இருப்பதையும் பார்த்து, மதுரை ஆதீன பக்தர்கள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி உள்ளனர். 1,300 ஆண்டுகள் பழமையான வரலாறு கொண்ட மதுரை ஆதீனத்திற்கு என, தொன்மையான பாரம்பரிய மிக்க மரபுகளும், வழிபாடு முறைகளும் உள்ளன.
கடவுளாக நித்யானந்தா: பெங்களூரு பிடதி தியான பீடத்தின் பிரதான அரங்கில், கருவறை போன்ற ஒரு அறை இருக்கும். நித்யானந்தா வேறு வழியாக அந்தக் கருவறைக்குள் வந்து அங்குள்ள தங்க சிம்மாசனத்தில் உட்கார்ந்து கொள்வார். கோவில்களில் நடப்பது போல, கதவு திறக்கப்படும். அவருக்கு முன்பாக அவரது சீடர்கள் ஐந்தாறு பேர் உட்கார்ந்து கொண்டு, நித்யானந்தாவுக்கு அபிஷேகம், ஆடை சார்த்துதல் போன்ற வழிபாடுகளை பாவனையாக செய்வர். இறுதியில், கோவில்களில் நடப்பதைப் போல நித்யானந்தாவுக்கு அடுக்குத் தட்டு தீபாராதனை நடக்கும். பூஜை முடிந்த பின், அவர் உபதேசம் செய்வார். அதில் பகவத் கீதை சுலோகங்களை சொல்லி அதற்கு விளக்கம் அளிப்பார்.
மதுரை ஆதீனத்திலும்...: பிடதி தியான பீடத்தில், நடந்த இந்த தனிநபர் வழிபாடுகளை, தற்போது மதுரை ஆதீனத்தின் மாடியில் உள்ள பாஸ்கர சேதுபதி இல்லத்தின் முன்பு நித்யானந்தா நடத்தி வருவதாக, ஆதீன பக்தர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். இந்த இல்லம் முன்பாக, நித்யானந்தா தனக்குத் தானே நடத்தி வரும் பூஜைகள் அனைத்தும் அவரது ஆசிரம இணையதளத்திலும், நித்யானந்தா டி.வி.,யிலும் தேதி வாரியாக ஒளிபரப்பப் பட்டு வருகின்றன.
இது குறித்து, கடந்த வாரத்தில் சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய சுகி.சிவம்,"நித்யானந்தா பகவத் கீதையையும், அத்வைதத்தையும் போதித்து வந்தார். மதுரை ஆதீனத்திற்குள் வந்த பின், இதுவரை அவர் சொல்லி வந்த அத்வைத கருத்துக்களை விட்டு விட்டதாகக் கொள்ளலாமா? அவரது உபதேசங்களின் கதி என்ன? என, கேள்வி எழுப்பி இருந்தார்.இன்று வரை இதற்கு நேரடியாக நித்யானந்தா பதிலளிக்கவில்லை. மாறாக, கடந்த வாரம் ஒருநாள், மதுரை ஆதீன மாடியில் நடந்த தியான சத்சங்கத்தில் பேசிய அவர், சுகி.சிவத்தை, "பூல், இடியட், டாங்கி என, ஆங்கிலத்தில் திட்டினார்.தொடர்ந்து, தான் தேசிய மதப் பாரம்பரியத்தின் பிரதிநிதி என்றும், குறுகிய மனம் கொண்டோருக்கு தனது கீதை உபதேசம் பொறுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
பக்தர்கள் வேதனை: நித்யானந்தாவின் இதுபோன்ற மரபு மீறல்களை கண்டு மதுரை ஆதீன பக்தர்கள் கடும் வேதனை அடைந்து உள்ளனர்.இது குறித்து, மதுரை ஆதீன மீட்பு குழுத் தலைவர் நெல்லை கண்ணன், கூறுகையில்,""நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பியதாகத் தன்னை அறிவித்த தமிழ் ஞான சம்பந்தரின் மடத்தில் இருந்து கொண்டு, இவர் பகவத் கீதை பற்றி பேசுவது, சரியில்லை.கீதையைப் பேச வேண்டிய இடங்கள், மடங்கள் தனியாக உள்ளன, என்றார். மேலும், ""மதுரை ஆதீனத்தில் திருமுறைகளும், சைவ சித்தாந்த சாத்திரங்களும் தான் ஓதப்பட வேண்டும். இது குறித்து, அருணகிரிநாதர் வருந்தவில்லையே என, நான் வருந்துகிறேன். நித்யானந்தா, மதுரை ஆதீனத்தை பிடதி ஆசிரமமாக மாற்றப் பார்க்கிறார். உடனடியாக அவர் அங்கிருந்து வெளியேற்றப் பட வேண்டும், என்றார். திருப்பனந்தாள் கலைக் கல்லூரி, முன்னாள் முதல்வர், மா.வே.பசுபதி கூறுகையில், "சைவ மடங்களில் கீதை உபதேசித்ததாக வரலாறு கிடையாது. மரபும் அல்ல. தேவாரம், சித்தாந்த சாத்திரங்கள், தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் குறித்த போதனைகள், வகுப்புகள் தான் சைவ மடங்களில் நடக்கும். நித்யானந்தா மதுரை ஆதீனத்தை வேதாந்த மடமாக மாற்ற நினைக்கிறார். அடிப்படையையே மாற்ற முயல்கிறார் என்றார். சைவ சித்தாந்தத்தையும், தமிழையும் பாதுகாக்கத் தொடங்கப் பட்ட மதுரை ஆதீனத்தில், இத்தகைய மரபு மீறல் நடப்பது, ஆதீனத்தின் கொள்கைகளை மாற்றி, திசை திரும்பச் செய்துவிடும் என, பக்தர்கள் பொருமுகின்றனர்.
ஏன் மரபு மீறல்? இந்து மதத்தின் உட்பிரிவுகளில் சைவமும், வைணவமும் பிரதானமானவை. இவற்றுக்கான கொள்கைகள், வழிபாடுகள், ஆதார நூல்களும் வேறு வேறானவை. இவை இரண்டு தவிர, ஆதிசங்கரர் நிறுவிய அத்வைத தத்துவ மரபும் முக்கியமானது. இதற்கான ஆதார நூல்களும் வேறு.பொதுவாக, வைணவர்களும், அத்வைத மரபினரும் பகவத் கீதையை ஆதார நூலாக ஏற்றுக் கொள்வர். சைவர்கள் அந்நூலின் மீது மதிப்புக் கொண்டிருந்தாலும் அதை சைவ சித்தாந்தத்துக்குரிய ஆதார நூலாகக் கொள்வதில்லை. இவை அனைத்தும் தத்துவ வரலாறு அறிந்தோருக்குத் தெரியும்.பெருமாள் கோவில்களில், திவ்ய பிரபந்தத்தை விட்டு, தேவாரம் பாடினாலோ; சிவன் கோயில்களில் தேவாரத்தை விட்டு, திவ்ய பிரபந்தத்தை பாடினாலோ, எப்படி மரபு மீறலாக கருதப்படுமோ, அவ்வாறு தான், நித்யானந்தாவின் செயல் உள்ளது என, அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.