பதிவு செய்த நாள்
05
பிப்
2021
03:02
மதுராந்தகத்தில் உள்ள கோவில்களில், ஏரிகாத்த ராமர் என்ற கோதண்டராமர் திருக்கோவிலில், எங்கும் காணக் கிடைக்காத, ராமர் - சீதை கைகோர்த்து, திருக்கல்யாண கோலத்தில் நிற்கும் சிற்பம் இருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில், தேரடி தெரு எதிரே, ஏரிக்கரையையொட்டி, கோதண்டராமர் கோவில் உள்ளது. இங்கு, ஆனி மாத பெருந்திருவிழா, கருட சேவை, தெப்பம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள், விசேஷமாக நடைபெற்று வருகிறது.இக்கோவிலுக்கு, ஏரிகாத்த ராமர் கோவில் என்ற பெயரும் உண்டு. கி.பி., 1795- - 98ல், அளவுக்கு அதிகமான மழை பெய்து, மதுராந்தகம் ஏரிக்கரை உடையுமோ என, பதற்றமான சூழல் நிலவியது; ஊரே அச்சத்துடன் இருந்தது.அப்போது, ராமர், தன் தம்பி லட்சுமணனோடு, ஏரிக்கரை மீது நின்று, அலைமோதும் வெள்ள நீரால் ஏரிக்கரை உடையாமல் இருக்க, வில் அம்பு ஏந்தி நிற்பதை, மக்கள் பார்த்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஏரிகாத்த ராமர் கோவில் என, அழைக்கப்படுகிறது. இக்கோவில், மற்ற இடங்களில் இல்லாத வகையில், சிறப்பு வாய்ந்த ராமர் தளமாக கருதப்படுகிறது. ராமர், ராவணனை வதம் செய்ததை தொடர்ந்து, சீதையை மீட்டுக் கொண்டு, புஷ்ப விமானத்தில் அயோத்தி செல்கிறார்.அப்போது, வகுளராண்ய ஷேத்திரம் என, ராமாயணத்தில் கூறப்படும் மதுராந்தகத்தில், விபண்டக மகரிஷி ஆசிரமத்திற்குச் செல்ல, புஷ்ப விமானத்தில் இருந்து ராமர், சீதை கீழே இறங்குகின்றனர்.அங்கு, ராமர், தன் வலது கையால், சீதையின் இடது கையை கோர்த்து, திருக்கல்யாண கோலத்தில் காட்சி அளித்ததாக கூறப்படுகிறது. அந்த நிகழ்வே, கோதண்டராமர் கோவிலில் எழுந்தருளி உள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், ராமர் - சீதை திருக்கல்யாண கோலத்தில் கைகோர்த்து இருப்பதை பார்த்து, ரசித்து செல்கின்றனர்.